தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு பிள்ளைகள் ஒப்படைத்தனர்.
பலாலி காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முத்தையா சிவானந்தவேல் (வயது-73) என்ற முதியவரின் சடலமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டது.
முதியவர் தான் இறந்த பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தனது உடலை வழங்குமாறு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் உயிருடன் இருக்கும் போது விருப்பம் தெரிவித்திருந்தார்.
அவர் நேற்று வியாழக்கிழமை காலமானார். அவரது உடல் தெல்லிப்பழை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் பலாலி பொலிஸார் ஊடாக மனைவி மற்றும் பிள்ளைகள் தமது விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றில் முன்வைத்தனர்.
அவர்களது விண்ணப்பத்தை ஆராய்ந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா, உயிரிழந்தவரின் உடலை மனைவி மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்க அனுமதியளித்தார்.
கிரியைகளின் பின்னர் தந்தையின் உடலை ஒப்படைக்க பிள்ளைகள் விரும்பிய போதும் கிரியைகள் செய்வதற்கான நேரம் போதமையால் கிரியைகள் கைவிடப்பட்டு , உடல் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. #யாழ்மருத்துவபீடம் #உயிரிழந்த #பலாலி