கொரோனாவிற்கான ரஸ்யாவின் தடுப்பூசியின் மக்களுக்கான வினியோகம் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஸ்யாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஸ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.
இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளதென ரஸ்ய சுகாதார அமைச்சு நேற்றையதினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஸ்ய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும் என ரஸ்ய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே ரஸ்யாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #ரஸ்யா #தடுப்பூசி #அதிகாரப்பூர்வ #ஸ்புட்னிக்-5