முஸ்லீம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் எனவும் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரை கொடுத்து உரிமைகளை பெற்றுக்கொடுப்பேன் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும்.இதனூடாக தமிழ் முதலமைச்சர் ஒருவரை பெற வேண்டும்.இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர்.இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இது தவிர போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.இத்திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ள தற்போது தீர்மானித்துள்ளோம்.
முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சில கிராமங்களில் மக்களிற்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.கடந்த கால தேர்தல்களின் போது சில தரப்பினர் சாராயப்போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
தமிழ் மககள் மாற்றத்தை விரும்புகின்றார்கள்.இதற்கு தமிழரசு கட்சி தலைவரின் தோல்வியை குறிப்பிட்டு கூற முடியும்.விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமை வரவேற்க கூடியது.எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கு சிறந்த வாய்ப்புக்களை வழங்க கூடியதாக இருக்கும்.இந்த வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினை விமர்சிக்க முடியாது.நாங்கள் சொல்கின்ற கருத்தக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டார். #முஸ்லீம் #எதிரிகள் #கருணா #தமிழ்முதலமைச்சர் #புலம்பெயர்மக்கள்