கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இளம் மல்யுத்த வீரர் ஒருவரை விடுவிக்க வேண்டுமென்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த ஈரான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
2018இல் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புக் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 வயதான நவீத் அஃப்காரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைப்பதற்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக வீத் அஃப்காரி தொிவித்து வந்த நிலையில் அவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனையை நீதியின் பரிதாப நிலை என சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நஷனல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அஃப்காரி பேசிய பதிவு ஒன்று கசிந்துள்ளது. அதில், ஒருவேளை நான் தூக்கிலிடப்பட்டால், நான் ஓர் அப்பாவி என்பதையும், இதற்கு எதிராக முழு பலத்தோடு போராடிய போதிலும், தூக்கிலிடப்பட்டேன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொிவித்துள்ளாா்.
ஈரானின் தெற்குப்பகுதியிலுள்ள நகரமான ஷிராஸில் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார் என்று அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் அவா்களது குடும்பத்தினரை சந்திக்க ஈரானின் சட்டம் அனுமதியளித்துள்ள போதிலும், அஃப்காரிக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நவீத் அஃப்காரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்துமாறு உலகெங்கிலும் 85,000 விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிற்சங்கம் உட்பட, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்திருந்தன.
போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் அநியாயமாக குறிவைக்கப்பட்டார் எனவும் மரண தண்டனையை நிறைவேற்றினால் ஈரான் உலக விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் உலக வீரர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #ஈரான் #தூக்கிலிடப்பட்ட #கொலைக்குற்றம் #மல்யுத்தவீரர் #நவீத்அஃப்காரி