(க.கிஷாந்தன்)
கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளன என்று திம்புள்ள – பத்தனை காவல்துறையினா் தெரிவித்தனர்.
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதால் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு (18.09.2020) பத்தனை நகரிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது.
வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
அதேவேளை, இன்று காலை முதல் மலைநாட்டில் இடையிடையே மழை பெய்து வருகின்றது. தொடர் மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதேவேளை ஹட்டன் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடமத்தக்கது. #கொட்டகலை #பத்தனை #நீர்த்தேக்கங்கள் #மண்மேடு #மழை