நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடத்தப்படாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தாழ்மையுடன் ஏற்கிறேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் செப்டம்பர் 12ஆம் திகதி தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் உயிருக்குப் பயந்து வீடியோ காணொளி மூலம் நீதி வழங்கும் நீதிபதிகள் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது எனத் தொிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
இந்நிலையில் சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் என்பவா் கடிதம் எழுதியிருந்தாா்.
இதனை நேற்று (செப்டம்பர் 18) நிராகரித்த தலைமை நீதிபதி சாஹி, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சூர்யாவுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து சூர்யா தனது ருவிட்டர் பக்கத்தில், “இந்திய நீதித் துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவைத் தருகிறது. நான் எப்போதும் நமது நீதித்துறை மீது மிக உயர்ந்த மதிப்பை வைத்துள்ளேன். நமது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை நீதித் துறைதான். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். #நீதித்துறை #பெருந்தன்மை #சூர்யா #நீதிமன்றஅவமதிப்பு #நீட்தேர்வு #அரசியலமைப்பு