முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (23.09.20) கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யூ.ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்தனர்.
பின்னர் வழக்கினை எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்த நீதிமன்றம் அன்றைய தினம் குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தது.