தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பிலான கட்டளை இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த கால பகுதியான கடந்த 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நல்லூர் ஆலய வீதியில் இந்திய அரசாங்கத்திடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணம் ஊரெழு எனும் இடத்தை சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் (வயது 24) உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
நீர் , அகாரம் எதுவும் இன்றி அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றபடாமையால், தொடர்ந்து 12நாட்கள் நீர் , அகாரம் இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்க ஏற்பாடுகள் நடைபெற்ற வேளை , பொலிசாரினால் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் நிகழ்வுக்கு எதிராக தடையுத்தரவுகளை பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழில் நல்லூர் உள்ளிட்ட இடங்களில் நிகழ்வுக்கு தடை கோரியதுடன் , கோப்பாய் பொலிசார் யாழ்.பல்கலை கழகம் உள்ளிட்ட இடங்களில் நிகழ்வுகளை நடாத்த யாழ்.நீதவான் நீதிமன்றின் ஊடாக தடை கோரி இருந்தனர்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுக் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 14ஆம் திகதி அழைக்கப்பட்டது. காவல்துறையினாின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தடையை நீக்க கோரி நகர்த்தல் பத்திரம் அணைத்து சட்டத்தரணிகள் கோரிக்கை முன் வைத்தனர். அது தொடர்பிலான விசாரணைகள் கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார். அத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை காவல்துறையினர் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.
தியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமகயக் காவல் நிலைய பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் உள்ளிட்ட இருவரது சமர்ப்பணங்களை முன்வைக்கும் வாய்ப்பை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டளை இன்று வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #தடை #கட்டளை #தியாகதீபம் #திலீபன் #நினைவேந்தல் #தமிழீழவிடுதலைப்புலிகள்