உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வௌிநாடு சென்றமை ஊடாக அவர் தனது பொறுப்பை புறக்கணித்துள்ளதாக ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (24.09.20) முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்பது பதவி ஒன்று மாத்திரமே. எனக்கு வழங்கப்பட்டிருந்த நிறுவனங்கள், வர்த்தமானியில் தனியான அமைச்சாகதான் பணிகளை செய்தேன். எனது அமைச்சின் கீழ் ரணவிரு சேவா அதிகார சபை, பாதுகாப்பு பாடசாலை, பாதுகாப்பு பணியாளர்கள் கல்லூரி ஆகியவைதான் காணப்பட்டன.
காவற்துறை, புலனாய்வுப் பிரிவு, முப்படை அனைத்தும் எனது அமைச்சின் கீழ் இல்லை. அப்படியிருக்கையில் நாட்டின் பாதுகாப்பு எனது கையில் என கூற முடியாது. குறித்த விடயதானங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சருக்கு கீழ்தான் இருந்தன. தேசிய பாதுகாப்பு அப்போதைய ஜனாதிபதியின் கையில்தான் இருந்தது. அவர் அந்த சமயத்தில் வௌிநாட்டு சென்றமையினால் அவரின் கடமைகளை சரிவர செய்யவில்லை என தான் கருதுவதாக ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.