“இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் கேட்கப்பட்ட ஒரு மெல்லிசை குரல் எஸ்.பி.பி உடையது. அவரின் இசை பல தசாப்தங்களாக மக்களை கவர்ந்தது,” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.
இந்திய முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் இந்திய இசை உலகம் தனது மிகப்பெரிய குரல்களில் ஒன்றை இழந்து விட்டது. பாடும் நிலா என அழைக்கப்படும் எஸ்.பி.பி எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருந்தவர். பத்ம பூஷண் விருதும், தேசிய திரைப்பட விருதும் வழங்கி அவருக்கு கெளரவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “கலாசார உலகிற்கு இது ஒரு இழப்பு, இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் கேட்கப்பட்ட ஒரு மெல்லிசை குரல். அவரின் இசை பல தசாப்தங்களாக மக்களை கவர்ந்தது,” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபியின் மரணம் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரது இனிமையான குரல் மூலம் நம் நினைவுகளில் என்றும் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஐந்து தலைமுறைகள் தாண்டி அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்த குரலால் கட்டிப்போட்ட பன்முக ஆளுமை எஸ்.பி.பியின் மறைவு திரைத்துறைக்கும் இசை உலகுக்கும் ஈடில்லா பேரிழப்பு என்று கூறியுள்ளார்.
“எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும்.” என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், “பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம். கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! அவருடைய மறைவு, இசை உலகிற்குப் பேரிழப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.
“பாலு சார் பல வருடங்களாக நீங்கள் எனது குரலாக இருந்துள்ளீர்கள். உங்கள் குரலும், உங்களின் நினைவுகளும் என்னுடன் எப்போது வாழும்,” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.பி.பி குறித்து பேசிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
“அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்” என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்து அதனுடன் சிறு காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் இறப்பு வருத்தமளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார். மேலும் அவரது குரல் பல தலைமுறையினராலும் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பெருமை பத்ம ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றதாக மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் மரணம் பேரடியாகியிருக்கிறது என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், சர்ச்சைக்கிடமில்லாத உங்களுடைய இசை மரபு என்றென்றும் தழைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பல முக்கிய இந்திய பிரபலங்கள் எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
இன்னிசை ஜாம்பவான் “பாடும் நிலா பாலு”
உங்களுடன் ஏற்பட்ட அந்த இனிமையான நினைவுகளை நினைவு கூறுகிறேன் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் சில மாதங்களுக்கு முன் எஸ்பிபி அவர்களுடன் இணைய வழியில் பேசியதாக குறிப்பிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
எஸ்பிபியின் இறப்பு சொந்த இழப்பின் உணர்வை தருவதாக குறிப்பிட்டுள்ள நடிகை த்ரிஷா, அவரது பாடல்கள் இடம்பெற்ற படங்களில் நடித்தது பெருமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் பாடல்கள் நீடித்து நிலைக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உங்கள் பாடல்கள் வழியாக நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் டி.ஆர். சிலம்பரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எத்தனை ஆயிரம் பாடல்கள்? பாடிக்கொண்டிருக்க முடியுமா ஒரு மனிதரால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன் எஸ்.பி.பி என்று கூறியுள்ளார்.
`இந்த வருடம் மேலும் மோசமடைகிறது` என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபியின் மறைவுக்கு தெலுகு திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசைத்துறைக்கு அளித்த உங்கள் பங்களிப்புக்கு நன்றி என பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் ட்வீட் செய்துள்ளார்
எஸ்பிபியின் மறைவுக்கு பல இந்திய அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன,” என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழர் நெஞ்சங்களில் பலவருடங்களாக தனது காந்தக் குரலால் வசீகரத்திருந்த , அனைவராலும் அன்புடன் “பாடும் நிலா” பாலு என அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு செய்தி அறிந்து தாங்கொணா துயர் அடைந்தேன்” என பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.
பின்னணி பாடகர் ‘பத்ம பூஷன்’ திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தன் வசீகரமிக்க குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி. என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், “பாடும் நிலா பாலு, நீங்கே சென்றாய், உலகில் உள்ள ரசிகர்கள் எல்லோரும் உன்னை தேடுகிறார்கள் என்று கண்ணீர் மல்க பாடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக உலக ரசிகர்களே கண்ணீர் மல்க காணப்படுகிறார்கள். நாங்கள் சொல்லிக்கொடுக்கும் முன்பே பாடல்களை பாடி எல்லோருடைய அன்பைப் பெற்றவர் எஸ்.பி.பி. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்,” என்று கூறினார்.
எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி. பிரகாஷ் என ஏராளமான இசை அமைப்பாளர்களுடம் வயது வித்தியாசமின்றி எல்லா தலைமுறைகளையும் சென்றடைந்த ஒரு பாடகர் உண்டு என்றால் அது எஸ்.பி.பி ஒருவரால் மட்டுமே முடியும். அவரது இடம் அவர் ஒருவரால் மட்டும் நிரப்ப முடியும் என்றும் சங்கர் கணேஷ் தெரிவித்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், எஸ்.பி.பி மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது. அவரது ஒரு இசை இமயம். எங்கள் தலைமுறை அவரது குரலை கேட்டே வளர்ந்தோம். அவரது மரணம், தமிழ் திரைப்படத்துறைக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.
பாடகர் ஸ்ரீநிவாஸ், “எல்லோருக்கும் முழுமையானவராக எஸ்.பி.பி விளங்குகிறார். ஆயிரம் நிலவே வா என்ற அவரது பாடலை கேட்ட பிறகு அனைவருமே அவரது நீங்கா ரசிகர்களானார்கள். இப்படி ஒரு நிலை வருமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களுக்கு எல்லாம் அவர் ஒரு பீஷ்ம பிதாமகர் போல விளங்கினார்” என்று தெரிவித்தார்.
பாடகர் கிருஷ், “அவரின் குரலை கேட்டுதான் நாங்கள் வளர்ந்திருக்கும். இந்திய திரையுலகிற்கு இது ஒரு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். என்னை மேடைகளில் நிற்க வைத்து அழகு பார்த்தவர் அவர்,” என பாடகர் கிருஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“எஸ்.பி.பி ஒரு பாடல் பள்ளிக்கூடம். ஒரு பாடல் பாட வேண்டும் என்றால் அவரின் பாடலைதான் கேட்பார்கள். இந்த இழப்பு மிகப்பெரிய வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது,” என பாடகர் வேல் முருகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நடிகர் மோகன் இரங்கல்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்கள் மூலம் திரைத்துறையில் புகழின் உ்சசிக்கு சென்றவர் தமிழ் திரைப்பட நடிகர் மோகன். அந்த அளவுக்கு 1980கள், 1990களில் அவர் நடித்த பல படங்களில் மோகனின் பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பியின் மறைவையொட்டி நடிகர் மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்த்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன். எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
“எஸ்.பி.பியின் இசைப்பயணத்தில் எனக்கும் அவர் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். அதே போல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார்.அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர்.”
எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்.இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்..அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நடிகர் மோகன் கூறியுள்ளார்.
THANKS – BBC TAmil