திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை
நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு கூட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் அரசியல் போராட்டந்தான். அதை அரசியல் ரீதியாகத்தான் போராட வேண்டும். அதை ஒரு சட்டப் பிரச்சினையாக குறுக்கக் கூடாது. ஆனால் தமிழ்க் கட்சிகளின் பிரமுகர்கள் பலர் சட்டவாளர்களாக இருப்பதால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கி விட்டார்களா ? அல்லது அதையோர் அரசியல் போராட்டமாக முன்னெடுப்பதற்கு தேவையான அறவழிப் போராட்ட ஒழுக்கம் அல்லது அகிம்சா தரிசனம் அவர்களிடம் இல்லையா?
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மூத்த அரசியல் ஆய்வாளரைச் சந்தித்தார். அப்பொழுது அரசியல் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார் “நீங்கள் நாடாளுமன்றத்தில் எவ்வளவு வீரமாக உரையாற்றினாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை அதற்கும் அப்பால் நீங்கள் போராட வேண்டியிருக்கிறது” என்று. அப்போது அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பின்வரும் தொனிப்படச் சொல்லியிருக்கிறார் “நாங்கள் சட்டப்படிதான் போராடலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தை மீறி செயற்பட முடியாது” என்று.
இப் பதிலால் ஆத்திரமடைந்த அந்த மூத்த ஆய்வாளர் பின்வரும் தொனிப்பட கூறியிருக்கிறார் “சட்டப்படிதான் போராடலாம் என்றால் இந்த பூமியில் எந்த ஒரு போராட்டமும் நடந்திருக்காது. எல்லா போராட்டங்களுமே சட்டமறுப்புத்தான். இந்தியாவில் நடந்த காந்தியின் அகிம்சைப் போராட்டங்கள் எல்லாம் எல்லாமே சட்டமறுப்புத்தான்” என்று. அதன்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ஆய்வாளரைச் சந்திக்கச் செல்வது இல்லையாம்.
இதுதான் பிரதான பிரச்சினை. தமிழ் அரசியல்வாதிகளிடமும் கட்சித் தலைவர்களிடமும் ஓர் அறவழிப் போராட்டத்திற்கான பொருத்தமான தரிசனங்கள் கிடையாது. அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும் கிடையாது. இப்போது இருக்கும் கட்சித் தலைவர்கள் யாருமே சட்டமறுப்பு போராட்டங்களை ; சிறை நிரப்பும் போராட்டங்களை முன்னெடுக்கத் திராணி அற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் நினைவு கூர்தலை ஒரு சட்டப் பிரச்சினையாக அவர்கள் குறுக்கப் பார்க்கிறார்கள். அல்லது அப்படியான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கடந்த 1300 நாட்களுக்கும் மேலாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு புதிய அறவழிப் போராட்டம்தான். நிச்சயமாக அது காந்தியின் காலத்தில் இருந்தது போல இருக்க முடியாது. காந்தியின் காலம் வேறு ; சிறீ ராமுலுவின் காலம் வேறு ; திலீபனின் காலம் வேறு ; அன்னை பூபதியின் காலம் வேறு ; மண்டேலாவின் காலம் வேறு.
எனவே செல்பி யுகத்தின் நிலைமைகளுக்குப் பொருத்தமான ஒரு புதிய அறவழிப் போராட்டப் பாதையை தமிழ் மக்கள் கண்டுபிடிக்க வேண்டும். காந்தியின் அஹிம்சை குறித்து ஒரு விளக்கம் கூறப்படுவதுண்டு. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகத்தான் அப்படி ஒரு போராட்டம் சாத்தியமாகியது என்று. காந்தி கொல்லப்பட்ட போது அப்போதிருந்த பிரிட்டிஷ் பிரதானி நேருவிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “மகாத்மாவை நாங்கள் பல ஆண்டுகளாகப் பாதுகாத்தோம். ஆனால் உங்களால் சில ஆண்டுகள் கூட பாதுகாக்க முடியவில்லையே?” என்று. இக் கூற்றினை வேறுவிதமாக வியாக்கியானம் செய்பவர்கள் உண்டு. அதாவது பிரித்தானியாவின் ஜனநாயகம் காந்தியை பாதுகாத்தது. அது காந்தியைப் போன்ற ஒரு அறவழிப் போராட்ட தலைவரை வளர்த்தெடுக்க விரும்பியது. மாறாக ஓர் ஆயுதப் போராளியாகிய நேதாஜியை வளர்த்தெடுக்க விரும்பவில்லை. எனவே மேற்கத்திய ஜனநாயகம் காந்தியை விரும்பித் தெரிந்தெடுத்துப் பாதுகாத்தது என்று. எதுவாயினும் காந்தியின் அகிம்சை பிரிட்டிஷாரைப் பணிய வைத்தது. ஆனால் திலீபனின் அகிம்சைப் காந்தி தேசத்தைப் பணிய வைக்கவில்லை.
திலீபன் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்த பொழுது அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு அதைச் சுட்டிக் காட்டினார். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு இந்தியாவும் இலங்கையும் இறங்கி வரும் வாய்ப்புக்கள் குறைவு என்று. திலீபனைப் பின்பற்றி மகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள் ஆயிரக்கணக்கில் உண்ணாவிரதத்தில் இறங்குவார்கள். அப்படி அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினால் அதை இலங்கையாலும் தாங்க முடியாது ; இந்தியாவாலும் தாங்க முடியாது. எனவே திலீபனை போல வேறு யாரும் போராடக் கூடாது என்றால் அவரைச் சாகவிடும் முடிவையே இரண்டு நாடுகளும் எடுக்கும் என்று. அதாவது திலீபனின் காலமும் காந்தியின் காலமும் ஒன்றல்ல.பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய இலங்கை அரசாங்கங்களும் ஒன்றல்ல.
காந்திக்குப் பின் அவருடைய அறவழிப் போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுத்தவர்கள் என்று சிலரைச் சுட்டிக்காட்டுவது உண்டு. கெடுபிடிப் போர் காலத்தில் போலந்தில் கம்யூனிசத்துக்கு எதிராக போராடிய தொழிற்சங்கவாதி லெட் வலேசா ; பர்மாவில் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக வீட்டுக் காவலில் இருந்தபடி போராடிய ஆங்சாங் சூகி; தென்னாபிரிக்காவில் சிறையில் இருந்தபடி போராட்டத்தை வழி நடத்திய மண்டேலா ஆகிய மூவரையும் அவ்வாறு காந்தியத்தின் அடுத்தடுத்த தசாப்த கால வளர்ச்சிகளாக சுட்டிக்காட்டுவது உண்டு.
லெட் வலேசாசா கம்யூனிசத்திற்கு எதிராகப் போராடியதால் முதலாளித்துவ ஊடகங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தன.அவர் சோவியத் சாம்ராஜ்யத்தில் இருந்து போலந்தை விடுதலை செய்தார். அதனால் மேற்கத்திய அரசுகளும் ஊடகங்களும் அவரைப் போற்றின.
அடுத்தவர் ஆங்சாங் சூகி. அவரும் மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளைதான். கெடுபிடிப் போர் காலகட்டத்தில் வீட்டுக்காவலில் இருந்தபடி சீன சார்பு பர்மிய சர்வாதிகாரிக்கு எதிராகப் போராடினார். எனவே மேற்கத்திய அரசுகளும் ஊடகங்களும் அவரைக் கொண்டாடின. ஆனால் கடந்த நூற்றாண்டில் அவருக்கு இருந்த முக்கியத்துவம் இந்த நூற்றாண்டில் தலைகீழாகி விட்டது. ரோகியங்கா முஸ்லிம்கள் தொடர்பில் அவர் எடுத்த நிலைப்பாடு காரணமாக அவரைச் சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் மங்கிப் போய் விட்டது. இப்பொழுது ஆங்சாங் சுகியை காந்தியின் 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியாக யாரும் பார்ப்பதில்லை.
மண்டேலாவைப் பொறுத்தவரை அவர் சிறையிலேயே அதிக காலம் இருந்தவர். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு. அவர் போராடியதால் தென்னாபிரிக்கா விடுதலை பெற்றது என்பதை விடவும் கெடுபிடிப் போரின் முடிவுக் காலகட்டத்தில் உலக ஒழுங்கு மாறிய பொழுது தென்னாபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்தது என்பதே பெருமளவுக்குச் சரி. எனினும் வெற்றி பெற்ற கறுப்பினத்தவர்கள் பழி வாங்கவில்லை. கறுப்பினத்தின் மன்னிப்பை அவர்கள் உலகத்துக்கு கற்பித்தார்கள்.அதற்கு மண்டேலாதான் தலைமை தாங்கினார்.ஆயுதப் போராளியாக சிறைக்குச் சென்ற மண்டேலா சிறையிலிருந்து வெளிவரும் பொழுது அகிம்சை ஒழுக்கத்துக்கு உரியவராக காட்சி தந்தார். அதுவொரு அரசியல் ஆளுமை கூர்ப்பே.
இப்படிப்பட்டதோர் உலக அனுபவத்தின் பின்னணியில்தான் புதிய அறவழிப் போராட்டப் பாதை ஒன்றை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது.இதில் ஆகப் பிந்திய உதாரணங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மணிப்பூரில் பதினாறு ஆண்டுகளாக உணவைத் தவிர்த்துப் போராடிய இறோம் சர்மிளாவுக்கு என்ன நடந்தது? எந்த மக்களுக்காக அவர் போராடினாரோ அந்த மக்களே அவரைத் தேர்தலில் குரூரமாகத் தோற்கடித்தார்கள்.
மேலும் ஒரு ஆகப் பிந்திய உதாரணத்தை இங்கு காட்டலாம்.கடந்த ஆண்டு கோவிட்-19 தாக்கத்துக்கு முன் கொங்கொங்கில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி கோவிட்-19 சூழலுக்குள் கொதிப்படங்கிப் போய் விட்டதா? கோவிட்-19 ஒரு மக்கள் எழுச்சியை வீரியம் இழக்க செய்திருக்கிறதா?
எனவே ஒரு புதிய அறவழிப் போராட்டப் பாதை குறித்து சிந்திக்கும் எவரும் மேற்கண்ட உதாரணங்களை கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஐரிஷ் போராளி பொபி சாண்டைப் போல; ஆந்திராவைப் பிரிக்கக் கோரிப் போராடிய சிறீ ராமுலுவைப் போல ; திலீபனைப் போல ; அன்னை பூபதியைப் போல உயிரைத் துறக்கச் சித்தமாக இருந்தால் மட்டும் போதாது. அதற்கும் அப்பால் அந்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் ஓர்மத்தையும் மக்கள் மயப்படுத்த வேண்டும்.
அகிம்சை எனப்படுவது எதிரியை வதைப்பது அல்ல. எதிரிக்கு வலியுண்டாகச் செய்வதும் அல்ல. மாறாக அது ஒரு சுய சித்திரவதை ; சுய தியாகம் ; தன்னைத்தானே வருத்துவதன் மூலம் எதிரியைப் பணிய வைப்பது.
ரிச்சர்ட் ஆட்டென் போறோ தயாரித்த காந்தி திரைப் படத்தில் காந்தி தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தை தொடங்கிய பொழுது ஆற்றும் உரையில் அது அற்புதமாக வெளிப்படுகின்றது…..“நாங்கள் தாக்க மாட்டோம். ஆனால் அவர்களை ஏற்றுக் கொள்வோம்.எங்களுடைய வேதனையின் மூலம் அவர்களுடைய அநீதியை அவர்களுக்கு உணர்த்துவோம்; அது அவர்களை துன்புறுத்தும்.நாங்கள் போராட்டத்தைக் கைவிட முடியாது. முடியவே முடியாது. அவர்கள் எனது உடலை சித்திரவதை செய்யலாம் எனது எலும்புகளையும் முறிக்கக்கலாம்.என்னைக் கொல்லக்கூட முடியும்.ஆனால் அதன் மூலம் அவர்கள் எனது இறந்த உடலை அடையலாம். எனது கீழ்ப்படிவை அல்ல”
ஆனால் அவ்வாறு தம்மை வருத்திய திலீபனோ அல்லது அன்னை பூபதியோ அல்லது பொபி சாண்டோ அல்லது சிறீ ராமுலுவோ தமது இலக்குகளை வெற்றிபெற முடியவில்லை. எனினும் தமது மக்களை அவர்கள் கொதிக்கச் செய்தார்கள் திரளச் செய்தார்கள்.
` இவை மட்டுமல்ல மட்டுமல்ல இவற்றைவிடக் விட குரூரமான உதாரணத்தைச் இங்கு சுட்டிக் காட்டலாம். தீபெத்தை சீனாவிடமிருந்து விடுவிக்கப் போராடும் இயக்கத்தில் உள்ள சிலர் சிலசமயம் தங்களைத் தாங்களே தீ மூட்டிக் கொள்வதும் உண்டு. இவ்வாறு இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு தங்களைத் தாங்களே நூற்றுக்கணக்கானவர்கள் சாம்பலாக்கிய பிறகும் கூட சீனா அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை; உலக ஊடகங்களும் அவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை.
எனவே எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்கிறோம் என்பது இங்கு முக்கியம் அல்ல. தியாகத்தை எப்படி மக்கள் மயப்படுத்தப் போகிறோம் ; உலகத்தின் கவனத்தை எப்படி எங்களை நோக்கி ஈர்க்கப் போகிறோம் ; உலக அபிப்பிராயத்தை எப்படி எங்களுக்கு சாதகமாகக் கனிய வைக்கப் போகிறோம் என்பவற்றில் தான் ஒரு அறவழிப் போராட்டத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.
எனவே 2009 க்கு பின்னரான தமிழ் அரசியலை ஒரு புதிய அறவழிப் போராட்ட பாதையில் செலுத்துவதாக இருந்தால் அதற்கு முதலில் மேற்கண்ட உலக அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் அறவழிப் போராட்ட இயக்கங்களும் வேண்டும். இவை எவையும் இல்லாத ஒரு வெற்றிடத்தில் தான் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்க் கட்சித் தலைவர்கள் போராட்டம் வெடிக்கும் புரட்சி வெடிக்கும் என்று தமிழ் வாக்காளர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களா ?