ஆசிய நாடான ஆர்மேனியா மற்றும் அஸர்பைஜான் படைகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய நகோர்னோ காரபெக் பிராந்தியம் தொடர்பிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அஸர்பைஜான் படைகள், வான் மற்றும் ஆட்லறி தாக்குதல்களை ஆரம்பித்ததாக ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பஷின்யன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இரண்டு ஹெலிகொப்டர்களையும் 3 ட்ரோன்களையும் ஆர்மேனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
அத்துடன், தாக்குதல் நடத்தவந்த அஸர்பைஜான் விமானங்கள் விரட்டப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரங்க நிலைகள் அனைத்திலுமிருந்து பாரிய ஷெல் தாக்குதல்களை இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மேற்கொண்டுள்ளன.
நகோர்னோ காரபெக் பிராந்தியம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினை கடந்த சில மாதங்களாக வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் கடந்த ஜூலையில் இடம்பெற்ற மோதலில் 16 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபடுவதற்கு முன்னர், இரண்டு நாடுகளும் அதன் அங்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் கடந்த 4 தசாப்தங்களாக நகோர்னோ காரபெக் பிராந்தியம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.