நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரைப் பிணையில் விடக் கூடாது என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. விசாரணையின்போது போதைப் பொருள் கும்பல் பின்னணி தெரிய வந்தது. இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) விசாரணை தொடங்கியது.
சுஷாந்த்தின் தோழியான ரியாவுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக என்சிபி அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக ரியா, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரியா, ஷோவிக் ஆகியோர் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், இவர்களைப் பிணையில் விட எதிர்ப்பு தெரிவித்து என்சிபி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்சிபியின் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே திங்கள்கிழமை தாக்கல் செய்த இரு பிரமாணப் பத்திரங்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ரியாவுக்கும் அவரது சகோதரருக்கும் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களுடனும், போதைப் பொருள் கும்பலுடனும் நெருங்கிய தொடர்புள்ளது. மேலும் இவர்கள் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் அவர்கள் மீது போதை மருந்து, உளவெறியூட்டும் பொருள்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) பிரிவு 27 ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் கட்செவி அஞ்சல் பதிவுகள், செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் பதிவாகியிருந்த தகவல்கள் மூலம் இவர்கள் போதைப் பொருள்களுக்குப் பணப் பரிவர்த்தனை செய்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது. மேலும் ரியா தொடர்ந்து போதைப் பொருளை உட்கொள்பவர் என்பதுடன் போதைப் பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுஷாந்த் சிங் போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்பதை அறிந்துள்ள ரியா, தனது வீட்டில் போதைப் பொருளை சுஷாந்த் உட்கொள்ளவும், பதுக்கி வைக்கவும் அனுமதித்திருக்கிறார். ரியா, ஷோவிக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் வழக்கின் விசாரணையைத் தடுக்க முயற்சிக்கலாம் என்பதால் ரியாவுக்கும் ஷோவிக்கிற்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.