பாரிஸ் பிராந்தியம் தொற்றின் தீவிர நிலையை எட்டியிருப்பதால் நகரில் உணவகங்கள், மது அருந்தகங்கள் மீண்டும் மூடப்படலாம். அல்லது புதிய பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம்.
பாரிஸ் நகரசபை அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தொற்று நிலைவரம் தொடர்பாக கலந்தாலோசனை செய்வதற்காக பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ இன்று வியாழக்கிழமை பிரதமர்Jean Castex அவர்களைச் சந்திக்கிறார்.
பாரிஸ் போன்றே தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் Lille, Lyon, Grenoble Toulouse நகரங்களின் மேயர்களும் இன்று பிரதமரைச் சந்திக்கின்றனர்.
பொருளாதார முடக்கத்தை கருத்தில் கொண்டு உணவகங்கள், அருந்தகங்கள் மூடப்படுவதை கடுமையாக எதிர்த்துவருபவர் ஆன் கிடல்கோ. ஆனால் வைரஸ் தொற்று நிலைவரம் காரணமாக பாரிஸ் நகரம் உயர் ஆபத்து வலயமாகப் (“maximum alert zone”) பிரகடனப்படுத்தப்பட வேண்டிய கட்டத்தை தாண்டி உள்ளது.
இதனால் மார்செய் போன்ற நகரங்களின் வரிசையில் பாரிஸிலும் உணவகங்களை மூடும் அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருக்கும் மேயர்களுக்கும் இடையிலான சந்திப்புகளைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் இன்று மாலை வாராந்த செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். உணவகங்கள், அருந்தகங்கள் மீது விதிக்கப்படக்கூடிய புதிய கட்டுப்பாடுகளை அப்போது அவர் வெளியிடுவார் என்று தெரியவருகிறது.
Kumarathasan Karthigesu FB
01-10-2020
வியாழக்கிழமை