யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியும் தீயிட்டு எரித்த வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த நபர் “தனு ரொக்” எனும் வாள் வெட்டுக்குழு என காவல்துறையினரினால் கூறப்படும் குழுவின் தலைவர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனு என்பவரின் நெருங்கிய சகா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை தனு ரொக் குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனு மீது கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் படுகாயமடைந்த நிலையில் தனு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனு மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் ஆவா குழு என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்ட குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதனின் நெருங்கிய சகாவான அசோக் உள்ளிட்ட ஐவர் நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலையே தனுவின் சகாவின் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. #தனுரொக் #வாள்வெட்டு #நீர்வேலி #தாயார் # தாக்குதல் #வினோதன்