வாழும் போதே வாழ்த்துவோம் – மாரிமுத்து முத்துலிங்கம்
(முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்)
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. வடக்கில் 12 மஅ தூரம் ஏறாவூர் எனும் இடத்தில் வயல்களினாலும் நீர் நிலைகளினாலும் சூழப்பட்ட இயற்கை வனப்பு மிக்க இடமாக ஏறாவூர் அமைந்துள்ளது. இவ்வூரை பிறப்பிடமாகக் கொண்ட மாரிமுத்து முத்துலிங்கம் எனும் பல்துறை ஆளுமையாளர் பற்றி இன்றைய முதியோர் தினத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
முத்துலிங்கம் அவர்கள்1934ம் ஆண்டு மார்கழி மாதம் 31 ம் திகதிமாரிமுத்து அரசம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவர் சிறு வயதில் இருந்து கலைச் செயற’பாடுகள், கோயில் கடமைகள், சமூக தொண்டுகள்,சடங்கு ஆசார விழாக்கள், மனித வாழ்வியல் சடங்குகள், பாரம்பரிய தொழில் நடைமுறைகள் போன்ற அனைத்து விடயங்களிலும் ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார். இவ்வாறான ஈடுபாடுகள் இயல்பாகவே தனக்குள் வந்ததாகவே கூறுகின்றார்.இவர் சிறந்த அண்ணாவியார் ஆகவும்,நெடுங்கால தலைமைத்துவம் கொண்ட கோயில் தலைவர் ஆகவும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆகவும், மாவட்ட விவசாய அமைப்பின்தலைவர்ஆகவும் இவரது பணிகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன.
தமிழ் இனப்பற்று அறிவுப் பாரம்பரியம் கொண்டவர். பரம்பரை தொடர்ச்சியின் அடையாளம் ஆக விளங்கும் இவரது பரம்பரையை எடுத்து நோக்கின் முத்தர் – மாரிமுத்து – முத்துலிங்கம் என தழிழ் பெயர் வழித்தொடர்ச்சியாக தமது பரம்பரையை தொடர தன் பெயர் விகுதியில் இருந்து தன் பிள்ளைகளுக்குசுந்தரலிங்கம், சுகுமார், அமிர்தலிங்கம், விஷ;வலிங்கம், சாந்தலிங்கம், சண்முகலிங்கம், சங்கரலிங்கம், சந்திரலிங்கம்,சுபாஜினி, உதயராஜ் எனும் நாமங்களை இட்டு 09 ஆண்மாக்கரையும் 01 பெண்மகளையும் ஈன்று தனக்கு பின்னும் தன் பரம்பரை அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற பரம்பரை பற்றுடையவராகவும் காணப்படுகின்றார்.
1957 ஆண்டு தனது 19ம் வயதில் மகேஸ்வரி(நிர்மலா) என்பவரை திருமணம் செய்து சிறந்த கணவராகவும், தந்தையாகவும் ழூவாழ்ந்து வந்த நிலையில் 10 வது குழந்தை பிறந்து சில மாதங்களில் மனைவியை இழந்தார். ஆனால் இழந்த பிற்பாடும் தனித்தே வாழ்ந்து ஊர் மக்களுக்காகவும் ஊர்க் கோயிலுக்காகவும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றார். இந் நிலையில் பல்வேறு விசமிகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தற்துணிவோடு எதிர்த்து நின்று யதார்த்தமான நியாயமான போக்குடைய ஓர் நன் மதிப்பு மிக்க ஆளுமையாளர். குடும்ப பற்று, ஊர்ப்பற்று, சாதிப்பற்று, கோயில் பற்று, தொழில்ப்பற்று, சமூகப்பற்று, தமிழ்ப்பற்று, போன்றவற்றில் வீறு கொண்டவர்.
• பாரம்பரிய கூத்துச்செயற்பாடுகளில் முத்துலிங்கம் அண்ணாவியார்.
ஓவ்வொரு மனிதர்களும் வித்தியாசமான திறமைகள், ஆளுமைகள் கொண்டு வளர்ந்து வருகின்றார். எனவே அண்ணாவிமார்களிடம் கூத்துக்கலை வடிவம் தொடர்பாக வௌ;வேறு ஆளுமைகள் கொண்டு காணப்படுகின்றனர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முத்துலிங்கம் அண்ணாவியார் திகழ்கின்றார். இவர் வடமோடி கூத்துக்களிலே அதிகம் தேர்ச்சி பெற்றவர். கூத்து தாளக்கட்டுக்கள் அனைத்திலும் நுணுக்கங்களை அதிகம் தெரிந்தவராக விளங்குகின்றார். கூத்துக்களை பழக்கும் போது கூத்து கலைஞர்களோடு இணைந்து தாளக்கட்டுக்களை பிரித்து அவற்றின் நுணுக்கங்கள் என அனைத்து விடயங்களையும் சொல்லிக் கொடுக்கின்ற ஆளுமை மிக்கவராக விளங்குவதோடு கூத்து கலைஞர்களுக்கு கூத்து பழக்கும் போது ஆடிப்பாடி தாளம் போட்டு பக்குவமாக சொல்லிக் கொடுக்கும் பொறுமைமிக்க அண்ணாவியார் ஆவார். தாளக்கட்டுக்களை அழகியல் முறையில் கோருப்பதிலும் மத்தளத்தில் பலதரப்பட்ட தாளங்களை அடித்து காட்டுவதிலும் நிபுணத்துவம் கொண்டவர். 1957காலப்பகுதியில் தனித்து நின்று கூத்து அரங்கேற்றங்களை அரங்கேற்றிய பெருமை இவரையே சாரும்.
முத்துலிங்கம் அண்ணாவியார் அரங்கேற்றிய கூத்துக்கள்
- தர்மபுத்திரன் நாடகம்
- தட்சன்யாகம்
- குருகேத்திரன் போர்
- பூதத்தம்பி நாடகம்
- நல்லதங்காள் நாடகம்
- இராம நாடகம்
- 17ம் போர்
- 18ம் போர் போன்றன.
முத்துலிங்கம் அண்ணாவியார் ஆடிய கூத்துக்கள் - பூதத்தம்பி நாடகம் – பூதத்தம்பியாக
- குருகேத்திரன் நாடகம் – சதாசந்தனாக
- 17ம் போர் – கட்டியக்காரனாக
- தர்மர் அசுவமேதையாகம் – முனிவராக
- வாளவிமன் நாடகம் – கட்டியக்காரனாக போன்றன
கூத்தைப் பழக்குவதிலும் ஆடுவதிலும் கொப்பிபாப்பதிலும் பன்மைப்பட்ட ஆளுமையாளரானவர். நேர முகாமைத்துவம் கெண்டவர், சொல்நெறிவாளர், நேர்த் தெளிவு கொண்ட பண்பாளர்.
• பாரம்பரிய விவசாய அறிவாற்றல் மிக்க தொழிலாளர் முத்துலிங்கம்
பாரம்பரிய விவசாய முறைகளில் நிபுணத்துவம் உள்ளவராக காணப்படுகின்றார். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் நவீன விவசாய முறைகள் மூலமாக விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது மனித குலத்துக்கு ஆபத்தாகவும் அச்சுறுத்தல் ஆகவும் அமைந்து வரும் நிலையில் விவசாய தொழில் துறையில் 1965 – 2010 வரை வயல் வட்டவிதானைனயாகவும், மாவட்ட விவசாய தலைவர் ஆகவும் இருந்தார். வுpவசாயத்தில் தொன்மை மிக்க அறிவு அனுபவம் கொண்ட இவர் 1940 – 1965 காலப்பகுதிகளில் மாடு மிதித்து உழவு செய்த மூத்த அனுபவம் மிக்க விவசாயி. விவசாயம் தொடர்பான நுணுக்கங்கள், தீர்வுகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் எதுவானாலும் தெளிந்த அனுபவம் கொண்டவர். ஆரம்ப கால நெல் இனங்களான வெள்ளையப்பன், மஞ்சப்பான், இளங்கலையன், சீனட்டி, பறவாக்கலை, முருகன் சம்பா போன்றவற்றில் விதைத்து பெரும் விளைச்சல் கண்ட முதுசம் பெற்றவர் முத்துலிங்கம்.
வேளாண்மை செய்கையின் போது வேளாண்மைக்கு ஏற்படும் நோய்கள் தாக்கங்களில் இருந்து பாரம்பரிய முறையில் அமைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மருத்துவர் ஆகவும் ஆலோசகர் ஆகவும் இருந்து வருகின்றார்.விதை நெல்லுக்குரிய நெல் வகைகளை பதப்படுத்தும் முறைகளை அதிகம் தெரிந்தவராகவும் உணவிற்கு நெல்லை சேமிக்கும் போது கட்டப்படும் பட்டறை கட்டுவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
• சமூக வாழ்வியல் சடங்குகளில் தேர்ச்சியாளர் முத்துலிங்கம்
தனி மனித ஒழுக்கம் சமூகம் சார்ந்த நடத்தைகளில் இவரது சமூக அசைவியக்கம் சார்ந்த பண்பாட்டு அம்சங்கள் அவரிடம் வெளிப்படுவதை காணலாம். மது பழக்கம், புகைத்தல் அற்ற ஒரு சீர் கொள்வாதியாகவும் இருந்துவருகின்றார். மேலும் ஏறாவூர் 05 ஸ்ரீமதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயத்தில் 70 வருட தலைவர் ஆகவும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர், உப தலைவர் ஆக இருந்து வந்தார். கோயில் கடமைகள், ஒழுங்குபடுத்தல்கள் என அனைத்து முறைகளிலும் கைதேர்ந்தவர். திருமணச் சடங்குகள், மரணச் சடங்குகள் என செய்யும் முறைகள் அனைத்தையும் தெரிந்தவர் ஆகவும் இந் நிகழ்வுகளை முன்னின்று செய்பவராகவும் விளங்குகின்றார்.சடங்கு காலங்களில் தோரணம் கட்டுதல், பூப்பந்தல் கட்டுதல் போன்ற முறைகளை முழுமையாக அறிந்தவர். கோயில் கட்டட அமைப்பில் இருந்து சகலதும் தெரிந்த பண்பட்ட மூத்த வல்லுனர்.
• முத்துலிங்கம் அவர்களின் அறிவு ஆளுமை திறன்
காலணித்துவம் கட்டமைத்த சிந்தனைகளுக்கு உட்படாது அவற்றில் இருந்து விடுபட்டு பரம்பரைக் கலைவடிவங்களையும் பாரம்பரிய விவசாய முறைமைகளையும் பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு முறைகள் எனப் பலதரப்பட்ட விடயங்கள் மூலமாக எமது அடையாளங்களையும் பண்பாட்டையும் பாதுகாத்துச் செயற்பட்ட மனிதராக முத்துலிங்கம் எனும் ஆளுமையாளர் விளங்குகின்றார். எனவே இவரது பன்முக ஆளுமை அரை நூற்றாண்டு கால தொடர்ச்சியாக இடைவிடாத செயற்பாட்டைக் கொண்டது. இவரின் பணிகள் செயற்பாடுகள் நடைமுறைகள் நவீன கல்விப்பரப்பில் பேசப்படவேண்டியவை.
பொதுப்புத்தியில் கற்பிதம் செய்யப்படுகின்ற கட்டமைக்கப்படுகின்றமைக்கு அப்பால் நின்று ஒரு சமூகத்தின் இயங்கு நிலைக்கான பன்முகப்பட்டவராக முதுசம் பெற்ற முத்துலிங்கம் அவர்கள் பற்றி அறிமுகப்படுத்துவதிலும் கௌரவப்படுத்துவதிலும் இன்றைய முதியோர் தினம் பெருமை கொள்கின்றது.
வாழ்த்துகின்றோம் !
மொழி தொடுத்து, மாரிமுத்து முத்துலிங்கம் ஐயா
உங்கள் சேவைதனை நினைத்தே நாம் மகிழ்கின்றோம்!
ஏர்பூட்டி உழுத மண்ணாம்
ஏறாவூரின் ஐந்தாம் குறிச்சியிலே,
ஆல் விழுதாய் தழைத்தே,
அனைவர் மனதிலும் நிறைந்த
நல் உள்ளம் கொண்ட உழைப்பின் தலைமகன் நீங்கள்.
பக்தியும் பண்புசார் நன் நெறியும் பின்னிப்பிணைந்ததனால்,
இப் பெருவுலகில் இறை சேவையிலே,
எழுபது வருடங்களை இனிதாய் கடந்துள்ளீர்கள்.
நிர்மலாவாம் உங்கள் இல்லாளை கரம் பற்றி,
இனித்திடும் காதலோடு,
மண வாழ்வில் பத்துப் பிள்ளைகள் பெற்றே,
பாசத்தோடு வளர்த்து,
நாட்டிற்கு நல் முத்துக்களை தந்த
முத்தர் பரம்பரையின் செல்வம் நீங்கள்.
முடி வழித்து, காது குத்து என்றாலும்,
முடியாத பிரச்சினைக்கு தீர்வு வழி என்றாலும்,
முளைத்த நெல் மணியில் தீங்கு நிலை என்றாலும்,
அக் கணத்தில் நீங்கள் நின்றே
அனைவருக்கும் நல் வழி காட்டியே மகிழ்ந்திடுவீர்கள்.
கட்டியக்காரனாய், கதாப்பாத்திர வடிவமாய்
ஆடிய கூத்துக்களும்,
அரங்கேற்றிய வடிவங்களும்,
கலைகளிலே நீங்கள்
முன்னீட்டுக்காரர் என்பதை
முழுமையாய் எடுத்துரைக்கும்.
முத்தர் பரம்பரையின் சொத்தாய்,
எண்பத்தாறு வயதினிலே இன்னும் இளைஞனாய்,
சிரித்த முகத்தோடு வார்த்தைகள் பகிரும்
உங்கள் சிந்தனை ஆற்றல்
அனைவர் மனங்களிலும் அன்பை பகிர்ந்து நிற்கும்.
அன்பின் மொழியோடு (நாங்கள் )
ஆண்டவனை வேண்டியே போற்றுகின்றோம்!
நீண்ட ஆயுளோடு இவ் உலகில்
என்றும் நீங்கள் மகிழ்வோடு
வாழ்வதற்காய்…
நிலுஜா . S
(முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் )