அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
‘அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் உலக தினம்’ தொடர்பாக ஐநா தலைவர் கட்டரஸ் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் இந்த ஆபத்துக் குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.
அதாவது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகைமை, நம்பிக்கையின்மை, பதற்றங்கள் இவ்வாறு யோசிக்கத் துணிவதாக அன்டோனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
உதாரணமாக ட்ரம்ப் நிர்வாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பதற்றம், அமெரிக்க-ரஷ்ய உறவும் பதற்றமாக உள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீரை வைத்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். மேலும் இந்தியா-சீனாவும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, வடகொரியா ஏற்கெனவே தனது அணு ஆயுத வலு பற்றி பெருமையாகப் பேசி வருகிறது என்பதை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரச்சினைகளை மையப்படுத்திக் கட்டரஸ் கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை நவீனப்படுத்துதல் என்பது தர அளவிலான அணு ஆயுதப் போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அணு ஆயுதங்களை அதிகரிப்பதல்ல, மாறாக அதன் வேகத்தையும் திறனையும் அதிகரித்து இன்னும் துல்லியமாக்குவது பற்றிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஆயுதக்குறைப்பு ராணுவ ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது.
இருநாடுகளும் இந்த ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டும், இதில் தாமதிக்கக் கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும். ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை எனில் மீண்டும் ஆயுதப்போட்டியே ஏற்படும் என்று ஐநா எச்சரித்துள்ளது.