நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளன.
20வது திருத்தச் சட்ட மூல ஆவணத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி வாசுதேவ நாணயக்கார பிரதமர் மஹிந்த ராஜபகஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் இரட்டை குடியுரிமை உள்ள நபர் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்ற சரத்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு இரட்டைக் குடியுரிமை உள்ள நபர் நாடாளுமன்றம் வர வேண்டுமானால் அவர் தனது குடியுரிமையை இல்லாது செய்துவிட்டு வர வேண்டும் எனவும் வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் 19வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற போதும் அதில் உள்ள நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக வர கடும் எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பின்னர் அவருக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில் தற்போது 20ஆம் திருத்தம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.