இலங்கையில் தேடப்படும் குற்றவாளியான பாதாளக்குழு உறுப்பினர் சுனில் ஜெமினி பொன்சேகா பெங்களூரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த சுனில் ஜெமினி பொன்சேகா, தொடர்ந்தும் அங்கு தலைமறைவாகியிருந்தார்.
பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும் போலி கடவுச்சீட்டையும் பெற்று, கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெமினி பொன்சேகா வசித்து வந்துள்ளதாக இந்திய ஊகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இவர் தங்கியிருந்து, தமிழகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த குற்றங்களுக்காக தமிழக காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த சுனில் ஜெமினி பொன்சேகா, பெங்களூரில் தலைமறைவாகியிருந்த நிலையில், தமிழக கியுபிரிவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சுனில் ஜெமினி பொன்சேகா நேரடி தொடர்பில் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அழகப்பெரும, சுனில், ஜெமினி என்ற பெயர்களில் அவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தற்காரர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த அவரது தொலைபேசி இலக்கத்தை வைத்து தமிழக காவற்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்திருந்தனர்.
செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்திரி தேவி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுனில் ஜெமினி பொன்சேகாவை புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரிப்பதற்கு தமிழக காவற்துறையினர் தீர்மானித்துள்ளனர். #சுனில்ஜெமினிபொன்சேகா #பாதாளக்குழு #கைது #தாவூத்இப்ராஹிம்