இலங்கை பிரதான செய்திகள்

சஹ்ரான் 20 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தது…

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவற்துறைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாணந்துறை – சரிக்கமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட ஏழு பேர் கலந்துகொண்ட கலந்துரையாடலில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, முதலாவது தாக்குதலை மேற்கொண்டு அதிலிருந்து தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்துள்ள அவர்கள், திட்டமிட்டுள்ள இரண்டாம் தாக்குதலையும், பின்னர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மற்றுமொரு தாக்குதலையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்ததாக சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நுவரெலியாவில் அதிகளவில் வௌிநாட்டவர்கள் நடமாடும் இடமொன்றை தெரிவு செய்து அங்கு மற்றுமொரு தாக்குதலை மேற்கொள்வதற்குத் தேவையான பின்புலம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நியூசிலாந்தில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குலுக்கும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குலை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக உப காவற்துறை பரிசோதகர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் 21 ஆம் திகதியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாக்குதல் மேற்கொள்ளும் தினத்தை தீர்மானித்து மூன்று நாட்களில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சஹ்ரான் இதன்போது தெரிவித்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி அந்தத் தாக்குலை மேற்கொள்ள வேண்டும் என சஹ்ரான் அந்நேரத்திலும் தீர்மானித்து இருந்தாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவின் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் நௌபர் மௌலவி இடையில் தலைமைத்துவத்திற்காக சண்டை ஏற்பட்டதாகவும் குறித்த அதிகாாி விசாரணைகளின் போது தொிய வந்துள்ளதாகவும் தொிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறு #சஹ்ரான் #தீவிரவாதஒழிப்புபிரிவு #தற்கொலை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.