நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள, மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியின் ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (18.10.20) முற்பகல் 9 மணியளவில் மாநகர சபையின் பொது சுககாதார பிரிவினர் மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் அமைந்துள்ள சகல கடைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இங்கு அமைந்துள்ள 200 இற்கும் மேற்பட்ட கடைகள் தற்போது மூடப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோரே கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சுப்பர் மார்க்கட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் நாளை திங்கட்கிழமை காலை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு….
குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு இவ்வாறு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் குறித்த தரப்பினர் கலந்து கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இதன்போது மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று (18.10.20) தொற்று உறுதிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
பிலியந்தலை-பெலன்வத்த பிரதேசத்தில் இருவருக்கு கொரோனா…
பிலியந்தலை-பெலன்வத்த பிரதேசத்தில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது
தாயும் மகனொருவருமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மகன் வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றுவதுடன், கொரோனா தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து, இவருக்கு 16ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான தாய் ஹோமாகம வைத்தியசாலைக்கும் மகன் கொஸ்கம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 22 பேருக்கு கொரோனா…
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 22 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.