விசேட அதிரடிப்படையினர் உட்பட 17 காவற்துறை அதிகாரிகளுக்கு பேருக்கு கொரோனா…
காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் உட்பட காவற்துறை அதிகாரிகள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 10 பேர் காவற்துறை விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சுமார் 400 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு
இலங்கையில் இன்று வரையில் சுமார் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளாரல்.
ஹற்றன் நகர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது…
ஹற்றன் நகர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடணப்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவல் காரணமாக இவ்வாறு குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஹற்றனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இவர்களை சிகிச்சை முகாம்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்த ஹற்றன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை நேற்று முன்தினம் (25.10.2020) உறுதிப்படுத்தப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு பீசீஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5000 தொற்றாளர்களை நெருங்கும் மினுவங்கொட கொத்தணி…
இலங்கையில் இதுவரையில் 8,413 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 541 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.
அவர்களுள் பெரும்பாலானோர் பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தலில் இருந்தவர் 42 பேரும் அவர்களுள் உள்ளடங்குதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 3,933 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 4,464பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (27) காலை வரையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,941 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 3,900 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.