Home இலங்கை ஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்…

ஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்…

by admin

மேல் மாகாணத்திற்குள் வைபவங்களை நடத்துவதற்கும் தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

​நேற்று மாலை காவற்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது என்றும் கூறினார்.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மாகாணத்தில் 112 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதேபோன்று குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ஏனைய 68 காவற்துறை பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்கு சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கோ மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ யாருக்கும் வாய்ப்பில்லை.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் காவற்துறை வீதி தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதி தடைகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி உடாக மேல் மாகாணத்திற்கு வருவதற்கும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை.

விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக அத்தியவசிய சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுக்க செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல், மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் இந்த காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நாட்டில் பரவ ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும், பொறுப்புடனும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனை மீண்டும் நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்படுவது அவசியம்.

வைரஸ் தொற்று தொடர்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

நேற்று (28.10.20) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்..

நேற்று (28) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்று இனங்காணப்பட்ட 335 பேரில் 237 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 161 பேர் கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் 17 பேர் கொஸ்பேவ மற்றும் 21 பேர் மட்டக்குளிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் இனங்காணப்பட்டவர்களின் முழு விபரங்களையும் மேலே உள்ள படத்தில் காணலாம்.

மத வழிபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அதிகரிகளுக்கான அறிவுறுத்தல்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என்று அரச சேவை, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அமைசசின் செயலாளர் J.J. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளயிட்டள்ள ஊடக அறிக்கையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி நடத்தி செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் கடமைகளை ஆக கூடிய வகையில் நிறைவேற்றுவதில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன்.

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் பிரதானிகளினால் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 2020 ஏப்ரல் 18 திகதி இலக்கம்அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்வதுடன் அந்த சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டபடி அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்காக கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மரணம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா?

சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதை தான் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருக்கிய தொடர்பில் இருந்தவர்களினால் தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அதனால் தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். சாதாரண நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

PCR பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடதக்க தாமதம் நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் இவ்வாறான தாமதம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (29) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.

´கடந்த 23 ஆம் திகதி முதல் குறிப்பிடதக்க தாமதம் உள்ளது. முன்பைப் போன்று ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியாது. இவ்வாறு சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.´

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் இயந்திரம் சேதமடைந்துள்ளது. இதனை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களிலும் 24 மணித்தியாலமும் தொடர்ந்து இயங்கியதால் இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தை பழுது பார்க்க சீனாவில் இருந்து ஒருவரை அழைக்க வேண்டும். அவரை நாளைய தினத்திற்குள் நாட்டுக்கு அழைத்துவர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.´

இதேவேளை நாட்டில் சுகாதார பரிசோதகர்களுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

´நாட்டில் மொத்தமாக 1817 சுகாதார பரிசோதகர்களே உள்ளனர். அவர்களில் 1400 பரிசோதகர்களே சிரேஸ்டதுவமிக்கவர்கள. இதனால் நாம் தொடர்ச்சியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். இருப்பினரும் அண்மையில் இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர்களின் பயிற்சியும் குறைவடைந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமாயின் விரைவாக இரண்டு குழுக்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டியது அவசியம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்´

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More