கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
54 வயதுடைய கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
வத்தளை கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா…
வத்தள பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் 1000 மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதாகவும் வத்தளை சுகாதார வைத்திய வலயத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த கைத்தொழிற்சாலையில் உள்ள 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த 49 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைத்தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வத்தள பகுதியை சேர்ந்த 75 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர தெரிவித்துள்ளார்.
7,000 தொற்றாளர்களை நெருங்கும் மினுவங்கொட கொத்தணி…
இலங்கையில் இதுவரையில் 10,424 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 633 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,946 ஆக அதிகரித்துள்ளதாகவும், அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 5,905 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இதுவரையில் 4,282 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,123 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் 60 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா
காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 காவற்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது வௌியே செல்ல அனுமதி உள்ளவர்கள்
மேல் மாகாணத்திற்கு உள்வரவோ அல்லது வௌியேறவோ விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மட்டுப்பாடு பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை அதிகரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத்தரதர உயர்தர பரீட்சையின் மேலும் சில பரீட்சைகள் இன்று (31) இடம்பெறவுள்ளது.
அவர்களுக்கான விஷேட புகையிரதம் மற்றும் பஸ் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.