அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் நாளை(03) நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் . குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.
இந்நிலையில் கொரோனா பரவல் காலத்தில் ட்ரம்ப் நடத்திய மிகப் பெரிய கூட்டங்களின் விளைவுகள்’ என்ற தலைப்பில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கடந்த யூன் 20ம் திகதி முதல் செப்டம்பர் 22ம் திகதி வரை ட்ரம்ப் நடத்திய 18 பிரச்சாரக் கூட்டங்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படவும் 700-க்கும் மேற்பட்டோா் உயிாிழப்பதற்கும் வழி வகுத்திருக்கலாம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதாரவிதிகளை முழு அளவில் பின்பற்றாத நிலையில் நடைபெற்ற மிகப் பெரிய கூட்டங்களால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனா்.
இந்தநிலையில் ட்ரம்ப் நடத்திய கூட்டங்களில் பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன எனவும் இக்கூட்டங்களில் சில சமயங்களில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றுள்ள நிலையில் நோய்த் தொற்று, மரணம் என அவர்கள் அதிக விலை கொடுத்துள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #அமெரிக்கா #ஜனாதிபதித்தேர்தல் #கொரோனா #ட்ரம்ப்