வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 16 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்த உத்தியோகஸ்தர் சிக்கியுள்ளார் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உத்தியோகஸ்தர், தற்போது வேறொரு திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆளணியினரின் சம்பளப் பட்டியல் கணினி மென்பொருள் ஊடாக கணிப்பிடப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.
எனினும் தற்போது சம்பளப்பட்டியல் மிகுதி சமப்படாத நிலையில் கணக்காளரால் ஆராயப்பட்ட நிலையில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் அதிகளவு கொடுப்பனவு கணிப்பிடப்பட்டு முன்னர் பணியாற்றிய உத்தியோகஸ்தர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
2018ஆம் ஆண்டு கணக்காளர் மாற்றத்தின் பின்னர் கணினி மென்பொருளில் சில ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலில் மோசடியாக கொடுப்பனவு மாற்றம் செய்யப்பட்டு குறித்த உத்தியோகஸ்தரின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர், 2018ஆம் ஆண்டு தொடக்கம் 16 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்துள்ளார் என்பது வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வவுனியா வடக்கு கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்ததுடன், மோசடி நபர் மீது உள்ளக மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்குப் பணித்தார். #வவுனியா #நிதிமோசடி #உத்தியோகஸ்தர் #சம்பளப்பட்டியல்