ஒரு விடயம் அல்லது பாடுபொருள் பல்வகைப்பட்ட வடிவங்களிலும் வெவ்வேறுபட்ட காலங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிப்படுத்தப்படும் விடயங்கள் அல்லது பாடுபொருள் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. ஒரே அர்த்தத்திலும் காணப்படுவதில்லை.
சமூகங்களில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளை பிரதிநிதித்துவம் செய்வனவாகவும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து நிற்பவையாகவும் இருப்பதையும் அவதானிக்க முடியும்.
ஒரே விடயம் அல்லது பாடுபொருள் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு காலகட்டங்களிலும் கலையாக, இலக்கியமாக இன்னும் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மக்களால் உள்வாங்கப்பட்டும் வருகின்றன. வேறுவேறு இடங்களில் வேறுவேறு வடிவங்களும் வேறுபட்ட வியாக்கியானங்கள் கொண்ட விடயங்களும் செல்வாக்குப் பெற்றிருப்பதும் அறியப்படக் கூடியது.
இவற்றிற்கான காரணங்கள் அறியப்படுவதும் எதிர்கொள்ளப்படுவதும் காலனிய நீக்கம் கொண்ட சிந்தனைகளும் செயற்பாடுகளும் உருவாகுவதற்கான காரணமாக கொள்ள முடிகிறது
மொழிபெயர்ப்பு என்பது விடயங்களை ஓர் எழுத்து மொழியிலிருந்து இன்னொரு எழுத்து மொழிக்குப் பெயர்ப்பது அல்லது மாற்றம் செய்வது என்பதே பொதுவாக அறியப்பட்டதாக இருக்கிறது. இதிலும் மொழி வழிப் பெயர்ப்பு, விடய வழிப் பெயர்ப்பு என இரு வகைகளைக் காண முடியும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பெயர்ப்பது வெறுமனே வார்த்தைகளின் பரிமாற்றங்கள் அல்ல. மாறாக அர்த்தங்களின் பரிமாற்றமாகும்.
குறித்தவொரு விடயம் வெவ்வேறு மொழிகளுக்கூடாகப் பயணிக்கும் பொழுது நிகழும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் மிகுந்த சிக்கல் தன்மைகளும் அரசியல் குணாம்சங்களும் கொண்டவையாகும். மொழிபெயர்ப்பில் சம்பந்தப்படும் மொழியின் பண்பாட்டு அரசியலும் மொழிபெயர்ப்பில் சம்பந்தப்படும் தரப்பினரின் நோக்கு நிலையும் நிலைப்பாடும் மொழிபெயர்ப்பில் தெரிந்த வகையிலும் தெரியாத வகையிலும் தொழிற்படுவதாக இருக்கும்.
குறித்தவொரு விடயம் நேரடியாகவே ஒரு மொழியிலிருந்து இன்னுமொரு மொழிக்கு மாற்றம் செய்யப்படுவதிலிருந்து வேறொரு மொழி வாயிலாக வரும் பொழுது மூல மொழி சுமந்திருந்த விடய அர்த்தம் அதன் உணர்வு நிலை என்பன எந்தளவிற்கு மூன்றாவது மொழியில் பதிந்திருக்கிறது என்பது மிகமுக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஏனெனில் தமிழ் மொழிச் சூழலில் ஆங்கில மொழி வழியே உலக எழுத்துக்கள் மிகப் பெரும்பாலும் அறியப்பட்டு வருகின்றன. இது ஆங்கில வழிபட்ட அல்லது ஆங்கிலத்தால் வழிப்படுத்தப்பட்ட உலகையே உருவாக்குவதாக இருக்கிறது.
சிங்களத்தில் இருந்தும் தமிழுக்கு ஆங்கிலம் வழியான மொழிபெயர்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன. சிங்களத்தில் இருந்து நேரடியான மொழிபெயர்ப்புக்கள் அளவில் மிகவும் குறைவானவையாகவே காணப்படுகின்றன. இவற்றிற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் சிந்திப்புக்களும் செயற்பாடுகளும் நிறைவுற்றிருப்பதன் காரணங்கள் உரையாடலுக்கு கொண்டுவரப்பட வேண்டியதாகும்.
தமிழில் வெளிவரும் கலை இலக்கிய சஞ்சிகைகள் பலதரப்பட்ட மொழிபெயர்ப்புக்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளன. இவையும் மிகப்பெரும்பாலும் ஆங்கிலம் வழிதான் எனினும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க, அரேபிய உலக மக்களுடையதென உலகின் பரந்தகன்ற பரிமாணங்களைக் காட்டுபவையாக இவை காணப்படுகின்றன. இத்தகையதொரு பின்னணியில் போர் அனர்த்தங்கள் அரசியல் கெடுபிடிகள்இபொருளாதார நோக்கங்கள் என இன்னோரன்ன காரணங்களால் பல நாடுகளுக்கும் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அந்நாட்டு மொழிகளில் தாடனங் கொண்டு தன்னார்வங்காரணமாக மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த முக்கியத்துவமுடைய விடயமாகியிருக்கிறது.
இதன் வரப்பிரசாதங்கள் நாவல்கள்இ சிறுகதைகள் கட்டுரைகள்இநேர்காணல்கள்இசினிமா மற்றும் புத்தக மதிப்பீடுகளை புதிய வெளியீடுகள் சிறிய அளவுகளிலேனும் திறக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான சூழலாகும்.
தனிநபர் அல்லது சிறுகுழுவிலான தன்னார்வச் செயற்பாடுகள் இந்த வாய்ப்புக்களை தந்திருப்பினும் இவற்றின் முக்கியத்துவம் கருத்திற்கொள்ளப்பட்டதாக இல்லை. ஆங்கிலம் வழி வாசிக்கப்பட்ட பல விடயங்கள் மூலத்திலிருந்து நேரடியான பெயர்ப்பினூடாக தமிழில் வாசிப்பது சாத்தியமாகி இருக்கிறது.
ஒரு விடயம் இருவேறு அல்லது பல்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்படும் பொழுது தொடர்புப் பரிமாற்றத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் வித்தியாசங்கள், வேறுபாடுகள் என்பவை கற்றலுக்குரியவை ஆகின்றன. உதாரணமாக பேற்றோல் பிறஜ்ட்டின் வெண்கட்டி வட்டம் நாடகத்தை அதன் ஜேர்மன் மூலத்திலும் பல்வேறுபட்ட ஆங்கில மொழிபெயர்ப்புக்களிலும் தமிழிலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.
இவ்வாறே ஹென்றிக் இப்சனின் “பியர் கின்ற்” நாடகத்தை ஆங்கிலப் பனுவல்கள் வழியாக மட்டுமல்லாமல் மூல நோர்வீஜியனில் இருந்து தமிழில் படிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. மூலத்திலிருந்து நேரடியாகவும் வேறு மொழிகள் வழியும் குறிப்பாக ஆங்கிலம் வழியிலான வெவ்வேறு பனுவல்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன ஏன் அவ்வாறு அமைந்திருக்கின்றன என்ற விடய விளக்கங்களுக்கான உரையாடல்கள் வேண்டப்படுவதாக இருக்கின்றன.
எழுத்து மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு மாற்றம் அல்லது பெயர்ப்புச் செய்யப்படுவது கற்றலுக்கும் உரையாடலுக்கும் கணிசமான வகையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆயினும் ஓர் ஊடகத்திலிருந்து மற்றுமோர் ஊடகத்திற்கு குறிப்பாக நாவல் அல்லது சிறுகதை நாடகமாக அல்லது திரைப்படமாக மாற்றம் பெறும் பொழுது நிகழ்த்தப்படுவன பற்றிய உரையாடல்கள் சினிமா ஆக்கப்பட்ட நாவல்கள் பற்றிய அனுபவங்கள் பற்றிச் சிந்திக்கும் பொழுதுஇ “நாவல் தந்த அனுபவத்தை சினிமா கொண்டுவரவில்லை” என்ற கூற்றை பொதுப்படையாக அவதானிக்கமுடியும்.
நாவலின் காட்சிகளை வாசிப்பவர் காண்கிறார். சினிமாவாக்கப்பட்ட நாவலில் பிறதொருவர் கண்ட காட்சியை காண நேரிடுகிறது. இது எமது அனுபவங்களிலிருந்து மிகப்பெரும்பாலும் வேறுபடுகிறது. இது நாவலில் பெற்ற அனுபவத்தை பெறமுடியாது போவதற்கான காரணமாக இருக்கலாம்.
அதேவேளை நாவல் வாசிப்பு என்பது தனிமனிதச் செயற்பாடு மூலம் வாய்க்கும் அனுபவம். ஆனால் சினிமா பார்ப்பது என்பது குழுநிலைக்குட்பட்ட அனுபவமாகும். தனிமை, மௌனம் தரும் உள்ளார்ந்த வாசிப்பு சினிமா மண்டபத்தில் சாத்தியமாவதில்லை. திரையரங்க அனுபவம் வித்தியாசமானது. சடங்கு அல்லது விழா அல்லது வைபவம் சார்ந்த அனுபவமாகும். திரை வாசிப்பு தனியொருவருக்கு உரியதல்ல பலதரப்பட்டவருக்குரியது. அதன் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவையாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும்.
மற்றுமொரு விடயத்தை நோக்குவோமானால்இ உதாரணமாக கம்பெரலிய நாவல் சிங்கள மொழி மூலத்தைக் கொண்டது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதுஇ தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருகிறது. சிங்களத் திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மூலத்திலிருந்து வேறு மொழிகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் மொழி பெயர்க்கும் பொழுது என்னவெல்லாம் நிகழுகின்றன? ஏன் அவ்வாறெல்லாம் நிகழுகின்றன? இவற்றில் நின்றியங்கும் மனித நிலைப்பாடுகள் அவற்றின் பண்பாட்டு அரசியல் என்பவை உரையாடலுக்கும் புரிதலுக்கும் உரியவை.
மேற்கண்டவாறாக உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் பொழுது ஒரு விடயம் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வாசிப்புக்களைக் கொண்டவையாக இருப்பதும், வெவ்வேறு ஊடகங்களில் வெவ்வேறு வாசிப்புக்களை கொண்டவையாக இருப்பதும் அவற்றில் சில பிரபல்யம் பெற்றிருப்பதும் அவதானத்திற்கு வரும்.
வேறுபட்ட சூழலில் வேறுபட்ட வாசிப்புக்களைக் கொண்டிருப்பது விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆனால் சில வாசிப்புக்கள் மிகப் பிரபலம் பெற்றிருப்பதும் அதிகாரம் பெற்றது போன்றதுமான தோற்றம் கொண்டிருப்பதன் காரணங்கள் உரையாடலுக்கு உரியவை. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஓளவையர் பற்றிய உரையாடல்கள் இருப்பினும் மூதாட்டியான ஓளவையே ஓளவையென அமைந்திருப்பதன் பண்பாட்டுப் பின்புலங்கள் உரையாடலுக்குரியவை. சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் இளமையானவளும்இ புலமையுடையவளும் மன்னர்களது தோழியுமானவளுமான ஒளவை என்ற ஆளுமை அறியப்படாது போனதன் காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதும் உரையாடலுக்குரியன.
குறிப்பாக வாய்மொழி இலக்கியங்கள் வழியான கட்டுருவாக்கங்கள் தரும் வாசிப்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றன. இவை எந்தளவிற்கு வெகுசன ஊடகங்களுக்கு உரையாடலுக்கு வந்திருக்கின்றன? எழுத்துவழி இலக்கிய வாசிப்புக்களுடன் தொடர்புபடும், வேறுபடும் இடங்கள் எவையாகவும், எந்தவகையிலானதாகவும் காணப்படுகின்றன.
காண்பிய ஊடகங்களுக்கு கொண்டுவரப்படும் பொழுது நிகழும் மாற்றங்கள், தேர்ந்தெடுக்கப்படும் ஊடகங்கள் அவற்றின் காரணங்கள் சிந்தனைக்குரியவை. வாய்மொழி விடயங்களை எடுப்பதிலும் கையாளுவதிலும் எழுத்திலக்கிய கையாளுகையிலிருந்து எவ்வண்ணம் வேறுபடுகின்றன? அல்லது ஒத்துப் போகின்றன? வாய்மொழி, எழுத்துமொழி, கலை இலக்கியங்களின் இயங்குதளங்கள் அதிகாரங்கள் அவற்றை ஆள்பவரின் இயங்குதளங்கள், அதிகாரங்கள் என்பவை எந்தவகையிலும் சமத்துவமானவையாக இருப்பதில்லை. இதன் சமூகப் பண்பாட்டு அரசியல் பின்புலங்கள் காலனியம் அறிமுகப்படுத்திய நவீனமயமாக்க அறிவுடன் தொடர்புடையது. எனவே இவற்றைப் புரிந்து கொள்ளவும் கலந்துரையாடவும் காலனியம், காலனிய நீக்கம் பற்றிய அறிதல்களும் உரையாடல்களும் அவசியமாகின்றன.
மேலும் குறித்தவொரு விடயம் வேறுபட்ட ஊடகங்களில் வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட வாசிப்புக்களுடன் காணப்பட்டாலும் குறிப்பிட்ட வாசிப்புக்கள் பிரசித்தம் பெற்றிருப்பது அதாவது மிகப்பெரும்பாலானோரால் அறிந்திருக்கவும் கொண்டாடப்படுவதற்கும் உரியதாக ஆகியிருப்பதன் பின்புலங்கள் அறியப்பட வேண்டியவையாக இருக்கின்றன. எத்தகைய வாசிப்புக்கள் அறியப்படாதவையாக ஆக்கப்பட்டிருப்பதை அவதானிக்க வேண்டியுள்ளது. மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட கதைகள் அல்லது பிரதி அல்லது பகுதி மறைக்கப்பட்ட கதைகள், திரிபுபடுத்தப்பட்ட கதைகள் போன்றவை ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
இதற்கான கற்றல் முறைகளும் ஆய்வு முறைகளும் மிகவும் வித்தியாசமானவை. பல்வகைப்பட்ட இலக்கிய வகைகளிலும், கலை ஊடகங்களிலும், வெவ்வேறு மொழிகளிலும் குறித்தவொரு விடயம் கொண்டுவரப்பட்டிருப்பதன் தாற்பரியம் அறியப்படுவது பல துறை அறிஞர், கலைஞர் இணைவும்; குறித்த விடயம் சார்ந்த அடிப்படை அறிவும் தெளிவும் கொண்ட மாணவர்களது பங்கேற்பும் அவசியமானது.
உதாரணமாகக் கண்டி அரசன் கதையை எடுத்துக் கொண்டால் அது எங்ஙனம் தமிழிலும் சிங்களத்திலும் கலையாகவும் இலக்கியமாகவும் (சிற்ப ஓவியமாக, நாவலாக, நாடகமாக, கூத்தாக, சினிமாவாக) கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் நிகழ்த்தப்படும். இந்தப் பயில்நெறியின் மாணவ வெளிப்பாடுகள் கலை இலக்கியமாகவும்,கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகளாகவும் இருக்கும். குழு நிலையிலான ஆசிரியப் பங்கேற்பிலும் மாணவப் பங்குபற்றலிலும் களப் பயிற்சி பாணியிலான பயில்வு முறையே இதற்குரியதாகவும்;அதாவது பங்குபற்றுவதனூடாகவும்செய்வதினூடாகவும் கற்றல் இங்கு அடிப்படையாகிறது.
சி.ஜெயசங்கர்