அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில மணி நேரத்துக்கு முன்னர் தேர்தலில் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வருவதாக வெளிவரும் தகவல் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஜோ பைடன் வெற்றியாளராக ஏன் பொய்யாக காட்டிக்கொள்கிறார் என்பதையும், அவருடைய ஊடக கூட்டாளிகள் அவருக்கு உதவ ஏன் கடுமையாக முயற்சி செய்கிறார்கள் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்: உண்மை அம்பலப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. எளிமையான உண்மை என்னவென்றால், இந்தத் தேர்தல் இன்னும் முடிவடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது.
ஜோ பைடனை வெற்றியாளர் என எந்தவொரு மாகாணமும் அறிவித்து சான்றிதழ் வழவில்லை. கடும் போட்டி நிலவியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட மாகாணங்களில் முடிவுகள் வரவில்லை அல்லது சட்டப்பூர்வமாக எங்களுடைய பிரசாரக்குழு முன்னெடுத்த வழக்கின் தீர்ப்புதான் கடைசியில் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக பென்சில்வேனியாவில் எங்களுடைய சட்டப்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறையின்போது அவற்றைப் பார்வையிட அர்த்தமுள்ள அனுமதி கிடைக்கவில்லை. சட்டப்பூர்வமாக பதிவான வாக்குகளே யார் அதிபர் என்பதை தீர்மானிக்கும், செய்தி ஊடகங்கள் அல்ல.
“திங்கட்கிழமை முதல், தேர்தல் சட்டங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதையும், சரியான வெற்றியாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு சட்ட நடவடிக்கையை தொடங்கும். ஒரு நேர்மையான தேர்தலுக்கான உரிமை அமெரிக்க மக்களுக்கு உண்டு: அதாவது அனைத்து சட்டப்பூர்வ வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகளை எண்ணுவது. அது சட்டவிரோத வாக்குகளை எண்ணுவது கிடையாது.
நமது தேர்தலில் பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான். பைடெனின் பிரசாரம், இந்த அடிப்படைக் கொள்கையுடன் உடன்பட மறுக்கிறது என்பதும், தகுதியற்ற அல்லது இறந்த வாக்காளர்களின் பேரால் மோசடி செய்யப்பட்டாலும், தயாரிக்கப்பட்டாலும், அல்லது வாக்களிக்கப்பட்டாலும் கூட அந்த வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என அவர்கள் விரும்புவது அதிர்ச்சியாக இருக்கிறது.
தவறான செயல்களில் ஈடுபடும் ஒரு தரப்பினர் மட்டுமே சட்டவிரோதமாக பார்வையாளர்களை வாக்கு எண்ணிக்கை அறைக்கு வெளியே இருக்கச் செய்வார்கள் – பிறகு அவர்களுக்கான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். “அப்படியானால் பைடன் எதை மறைக்கிறார்? அமெரிக்க மக்களுக்கு ஜனநாயகம் கோரும் அவர்களுக்குரிய வாக்குகள் நேர்மையாக எண்ணப்படும்வரை நான் ஓய மாட்டேன்,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
BBC