வடக்கில் அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியல் வாதிகளும் சுகாதார விதிமுறைகளையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதனால் பொதுமக்கள் அது தொடர்பில் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனோ தொற்று அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் சுகாதார விதிமுறைகளையும் தனிமைப்படுத்த சட்டத்தினையும் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என , ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இவற்றை பொதுமக்கள் மீது கடுமையாக பிரயோகிக்கும் பொலிஸ் , இராணுவம் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் தொடர்பில் கணக்கில் எடுக்காமல் செயற்படுவது குறித்து மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டங்களில் கொழும்பில் இருந்து வந்த அரசியல் வாதிகள் , அதிகாரிகள் கலந்து கொண்டமை தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்ததுடன் , ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் , இன்றைய தினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் பார்வையிட்டார். அதன் போது யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் முக கவசம் அணியாது அதனை கைகளில் சுற்றியவாறு சமூக இடைவெளியை பேணாது அருகில் நின்று உரையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன #கொரோனோ #சுகாதாரவிதிகள் #சட்டங்கள் #உதாசீனம் #அரசியல்வாதிகள் #தனிமைப்படுத்தல்