தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெறு வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பின் மூலம், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்கான கொள்கை உருவாக்கங்களையும், நடைமுறைகளையும் வகுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் செல்நெறியை வகுப்பதற்கும், முன்னெடுப்பதற்கும் ஒரு கட்டமைப்பு இல்லை எனவும், அவ்வாறான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் பலராலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் தமிழர் தேசிய சபையில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின்சூக்கா உள்ளிட்ட தமிழர் அரசியலில் ஈடுபாடுடைய சர்வதேச புலமையாளர்களையும், இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனினும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், இந்த விடயம் தொடர்பாக எந்தவிளக்கத்தையும் தற்போதைய நிலைமையில் வழங்க முடியாது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
#நவனீதம்பிள்ளை #யஸ்மின்சூக்கா #தமிழர்தேசியசபை