இறந்துபோன உடலங்களை
பதனிடும்
நச்சு இரசாயனமோ?
உடல்கள், உள்ளங்கள், மூளைகளை
ஆனந்தக் கூத்தாட வைக்கும்
சந்ததமோ?
கேள்விகள், கருத்துக்கள், கற்பனைகள்
வளர்க்க வரும் சுனையோ?
பேரலைகளென
அறிவுப் பெருக்கெடுக்கும்
கடலோ?
எது கல்வி?!
கேள்வி எழ,
உண்டோ அறிவு
இம்மாநிலத்தில்…
– சி.ஜெயசங்கர் –
பாரதியார் இன்று
இருந்திருப்பரேல்
‘சூம்’க்கு வழியில்லை என
‘ருவிற்’ செய்து
அக்குருவிக்கொரு பாட்டும்
கட்டி விட்டிருப்பார்
பரீட்சைக்குப் படிக்கவும்
கச்சேரிகளில் பாடவும்
பட்டிருப்போம் பாடு…
‘ஆளடியான்’ வேகத்தில்
அவர் முண்டாசு
காற்றில்
கொடிவிட்டுப் பறந்திருக்கும்
சவாரிக்கல்ல சாகசத்துக்கு
என
விளம்பரத்தில் விற்கப்படும்
மோட்டார் சைக்கிளில்
மோதுண்டு
அந்த இடத்திலேயே
மறைந்திருப்பார் அவர்
விசாரித்துப் பின்
பரிசோதித்து
தொற்று உறுதியென்றும்
விபத்தால் மரணமென்றும்
அறிக்கையும் பெற்றிருப்பார்
விபத்தில் பட்டாலும்
நல்லகாலம் புலவருக்கு
ஒரு பொல்லாப்பும் இல்லாமல்
சேர்ந்துவிட்டார் போய்
சி.ஜெயசங்கர்