காவல்துறையினரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால் , அவர்களை கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு பணித்த நீதவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க மறுத்து கட்டளை வழங்கினார்.
நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை காவல்துறைப் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை காவல்துறையின மனுத் தாக்கல் செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணையை நேற்றைய தினம் மன்று இன்றைய தினத்திற்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.
அதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
காவல்துறையினரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும் , இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறினால் மீறுபவர்களை கைது செய்யமாறும் கட்டளையில் குறிப்பிட்டார்.
அத்துடன் , பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் , இலங்கையின் சட்டதிட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது. #நினைவேந்தல் #தடை #மல்லாகம் #மறுப்பு #தமிழீழவிடுதலைப்புலிகள் #மாவீரர்நாள் #சின்னங்கள் #கொடிகள்