இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் பின்னர் சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஏனைய கட்சிகளும் இணைந்து பிரதேச செயலக விவகாரத்தில் முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது வெள்ளிக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
இந்த சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்மொழிந்து கலையரசன் வழிமொழிந்துள்ள இந்தப் பிரேரணையில் யதார்த்தபூர்வமான பல பரஸ்பர பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் இங்கு அடையாளம் காண வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் சில அரசியல்வாதிகளின் தலையீட்டின் காரணமாக தடைப்பட்டுள்ளது எனக் கூறுவதைப் பார்க்கிலும், பல வருடங்களாக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் ஒற்றுமையாக இந்த எல்லைப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பல முயற்சிகளை மிகத் தீவிரமாக முன்னேடுத்து வந்துள்ளோம்.
கடந்த ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் இவ்விடயம் தொடர்பிலான பல பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், நாங்களும் இணைந்து மேற்கொண்டு ஈற்றில் அதற்கென அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்து எல்லை நிர்ணய சபையொன்று உருவாக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் சுருக்கமாக கூறுவதானால், 29 கிராம சேவைப் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமும், அதேவிதமாகவே இன்னுமொரு 29 கிராம சேவைப் பிரிவுகளை உள்ளடக்கிய முஸ்லிம்களுக்கான கல்முனை பிரதேச செயலகத்திற்குமிடையிலான நிலங்களை பொறுத்தமட்டில், 70 சதவீதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு வெறுமனே 29 கிராம சேவைப் பிரிவுகள் மாத்திரமே இருக்கின்ற விவகாரத்திற்கும், பல முக்கிய எல்லை நிரணய பிரச்சினைகள் குறித்த சிக்கல்களுக்கும் நாங்கள் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இவற்றிற்கான சுமூகமான தீர்வை பெற வேண்டும்.
மேலும், இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் இதை விடவும் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டுமென்பதும், நிர்வாக ரீதியாக வடகிழக்கில் பல இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலத்தில் 8 கிராம சேவை பிரிவுகள் இருக்கின்ற நிலையிலும், இதுவரையில் அதன் எல்லைகள் சரிவர நிர்ணயிக்கப்படாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றன.
வடகிழக்கில் மாத்திரம் தான் இன ரீதியான வகையில் பிரதேச செயலகங்களை பிரித்தாளுகின்ற ஒரு நடைமுறை இருக்கின்ற சூழலில், கொள்கை ரீதியாக அரசாங்கம் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்திருக்கின்றதா என்ற பிரச்சினையை இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் சீர்த்;தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் தான் தமிழ் பேசும் இனங்களாக இருக்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இந்த எல்லை நிர்ணயம் சம்பந்தமான விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதன் நிமித்தமாக இவ்விடயம் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றோம். இதற்கென எல்லை நிர்ணய குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் பின்னர் சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த முடிவுக்கு வருவது தான் சாலச் சிறந்தது.
அதை விடுத்து, சாய்ந்தமருது சபையை தரமுயர்த்தி தருவதாகக் கூறி, அதன் மூலம் ஏற்பட்ட பல விபரீதங்களின் பிறகு அந்த விடயமும் கைவிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கும் இதற்கும் முடிச்சிப்போடுவதன் மூலம் அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும் தற்பொழுது விரக்தியடைந்துள்ள நிலையில், இவ்வாறான பிரச்சினைகளை மேலும் வளர்க்காமல் உரிய தீர்வை பெறவேண்டுமென்பதை வலியுறுத்துகின்றேன்.