Home இலங்கை ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர்.

ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர்.

by admin


ஆய்வும் எழுத்தும்
ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய ரீதியானஇ அறிவுபூர்வமான விடயங்களின் மொழியாகஇ வடிவமாகஇ ஊடமாக எழுத்து வடிவம் கொள்ளப்பட்டு வருகிறது. காலனியத்திற்கு முந்திய காலத்தில் வாய்மொழி மரபுகள் அறிவின் மொழியாக அமைந்த நீண்ட உறுதியான பாரம்பரியம் இருந்தும்இ ஆய்வின் மொழியாக எழுத்து வடிவத்தைத் தாண்டிச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கூட சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. நவீன மயமாக்கம் என்னும் கலனியமயமாக்கம் திணித்துவிட்ட எழுத்தின் ஆதிக்கம், அதிகாரம் வாய்மொழி மரபுகளின் அறிவுருவாக்கல் பண்புகளை நிராகரித்துவிடச் செய்திருக்கிறது.


கலையாக்கம் பற்றிய கற்பிதங்கள்


கலை வழி, ஆற்றுகை வழி அறிவுருவாக்கம், ஆய்வு முன்னெடுப்பு என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகிறது. கலை உருவாக்கம் பற்றிய பாரம்பரியச் சிந்தனைகள் அல்லது கதையாக்கங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். உதாரணமாக மிகவும் பிரபலப்படுத்தப்பட்டிருக்கும் கடவுளர் தோன்றி அறிவிலிகளையும்இ பேசமுடியாதவர்களையும் அறிஞர்களாக்குவது அல்லது புலவர்களாக்குவது, கலை வல்லபம் என்பது கடவுளின் கொடை போன்ற கதையாடல்கள் வலிமை பெற்றிருக்கின்ற சமூகச் சூழல் கலையின் அறிவுப் பரிணாமத்தையும், அறிவுருவாக்கப் பரிணாமத்தையும் பார்பதற்குத் தடையாக அமைந்திருக்கலாம்.
கலையுருவாக்கம் என்பது சில மனிதர்களுக்கான சிறப்பியல்பேயன்றி எல்லா மனிதர்களுக்கும் பொதுவான இயல்பு அல்ல என்பதை கட்டமைத்திருப்பதன் மற்றுமொரு பாதக விளைவு இது எனலாம். கற்பனை, சிந்தனை, விமர்சன நோக்கு, படைப்பாக்கத் திறன், முகாமைத்துவ ஆற்றல் என்பவை சில மனிதர்களுக்கு வாய்த்திருக்கும் வல்லபம் என்பதைக் கட்டமைப்பதன் ஊடாக மனிதருக்கான இயல்புகளை மறுதலிக்கும் ஆதிக்க நோக்கின் வெளிப்பாடாகவே அவதானிக்க முடியும்.


இதன் காரணமாக கலை கலையாக்கம் பற்றிய கற்பிதங்கள் அவை அறிவுருவாக்கத்திற்கு அப்பாற்பட்ட ஆத்ம அனுபவமாகவும் வெளிப்பாடாகவும் கொள்ளப்படும் பொதுப் புத்தியில் கலை இலக்கியம் ஆய்வு வெளிப்பாட்டிற்கான ஊடகமாகக் கொள்ளப்படுவதன் சாத்தியப்பாடுகள் நிராகரிக்கப்படுகின்றன.
கலை என்பது கற்பனை, கற்பனை மட்டுமே என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றிருக்கின்ற சூழலில் கலை ஆக்கத்திற்கான தேடல்கள், சிந்தனைகள், வெளிப்படுத்தல்கள் என்பவை பற்றிய விடயங்கள் கவனத்தில் கொள்ளாமல் விடுபட்டுப் போயிருக்கிறது.


கலை என்பது கடவுளோ அல்லது மேலான சக்தியொன்றோ தொடுவதால் அல்லது தொடர்புபடுவதால் நிகழ்த்தப்படுவது என்ற மாயை நவீன அறிவுச் சூழலிருந்து நீக்கம் பெறாததாக இருப்பதன் வெளிப்பாடே மேற்கூறிய நிலைமைக்கு காரணமாக இருக்கலாம். நவீன கலை இலக்கியக் கற்கையில் கலை இலக்கியம் பற்றிய பல்வேறு நோக்கிலான கற்கைகள் இடம்பெறுகின்றனவே அன்றி கலை இலக்கிய ஆக்கம்இஇதன் படிமுறைகள் பற்றியதான கற்கைகள் இருப்பதை அவதானிக்க முடிவதில்லை. ஆக மிஞ்சிப் போனால் கலை இலக்கிய ஆக்கத்திற்கான களப்பயிற்சிகள் நடைபெற்றிருக்கும், அதாவது கலை இலக்கிய ஆக்கம் கற்றலுக்கூடாக வருவதல்ல அது இயல்பாக வரவேண்டும் என்பதான நம்பிக்கை இதற்கு காணமாக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது.


ஆய்வும் புறவயத்தன்மையும்


ஆய்வுச் செயற்பாடு புறவயமானது அறிவுபூர்வமானது என வரையறுக்கப்படும் சூழலில் கண்டுபிடித்தலுக்கும் புத்தாக்கத்திற்குமான கற்பனை. அகவயப்பாடு மறுக்கப்பட்டு ஆய்வு என்பது இயந்திரப்பாங்கான உற்பத்தியாக மட்டுப்படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகள், கலைஞர்களது வாழ்க்கையை, எழுத்துக்களை, நேர்காணல்களை வாசித்தறியும் பொழுது ஆய்வின் அடிப்படையாகக் கற்றுக் கொடுக்கப்படும் புறவயமான அறிவுச் செயற்பாடு என்பதன் அர்த்தமின்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு படைப்பாக்கத்திற்கும் கண்டு பிடிப்புக்களுக்கும் தான் சார்ந்த, தாம் சார்ந்த நிலைப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. இந்த நிலைப்பாடு ஆதிக்க நோக்கத்திற்கானதா?அல்லது ஆதிக்கநீக்கத்திற்கானதா என்பதில் வேறுபாடுகள் காணப்படும்.


மேற்குறிப்பிட்டுள்ளதன் படி படைப்பாக்கம் பற்றிப் பொதுப்புத்தியில் உறையவைக்கப்பட்ட புராணீகச் சிந்தனைகள் நவீன அறிவுச் சூழலிலிருந்து விலகியதாக இல்லை. இத்தகைய நிலைமைகள் கலை இலக்கிய வடிவங்களை ஆய்வின் வடிவங்களாக ஏற்றுக்கொள்வதில் தடைகளை ஏற்படுத்தி வருவதற்கான காரணங்களாக அமையலாம்.


கலை இலக்கிய ஆக்கப் படிமுறைகள் பற்றிய உரையாடல்கள் இச்சூழலில் மிகவும் அவசியமாகின்றன. அப்போதுதான் கலை இலக்கிய ஆக்கப்படிமுறைகள் வேண்டி நிற்கும் ஆய்வு அறிவியல் பின்புலங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். கலை இலக்கியங்கள் பற்றிய மதிப்பீடுகள், விமரிசனங்கள், ஆய்வுகள் அறிவு முறைமைகளாகக் கொள்ளப்படும் சூழலில் கலை இலக்கியம் கொண்டிருக்கும் ஆய்வு அறிவுப் பரிமாணம் பற்றிய புரிதலின் வலுவாக்கம் அவசியமாகின்றது.


படைப்பாளர்கள் தமது படைப்பாக்கம், படைப்புருவாக்கம் பற்றிய காரண காரிய ரீதியாக கதைக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். படைப்பாக்கம் பற்றி மாயங்கள் கற்பிதங்கள் உருவாக்கப்படுவதற்கு பதிலாக படைப்பாக்கத்தின் யதார்த்தம் உரையாடப்படுவதும் உருவாக்கப்படுவதும் கலை இலக்கியங்கள் ஆய்வின் வடிவங்களாகக் கொள்ளப்படுவதன் தாக்கங்களை விளங்கிக் கொள்ள முடியும்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுபவர் என்ற வகையிலும், நடிகர், நடனகாரர், நாடகாசிரியர், நாடக நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர், பேச்சாளர், பாடகர், கலைச் செயற்பாட்டாளர் என்ற பின்புலத்தில் கற்பனை, சிந்தனை, அனுபவம், விமரிசன நோக்கு, படைப்பாக்கத்திறன், மதிப்பீடு என்பவற்றின் பிரிக்க முடியா தன்மையை உணர்ந்தும்இ அறிந்தும் கொள்ள முடிகிறது.
புதியன உருவாக்கத்தின் பின்னணியில் கற்பனையின் இடம் தவிர்க்க முடியாது. விஞ்ஞான கண்டுபிடிப்புக்களிலும், கலை இலக்கிய ஆக்கங்களிலும் இதனைக் கண்டுகொள்ள முடியும். அறிவியல் எழுத்துக்களிலும் இலக்கிய எழுத்துக்களிலும் வாசிப்புச் சுவையின் முக்கியத்துவமும் விடயத் தெளிவின் முக்கியத்துவமும் பிரிக்க முடியாததாக இருப்பதை வெற்றி பெற்ற எழுத்துக்களில் காணமுடியும்.


ஆய்வும் ஆற்றுகைக் கலைகளும்


எனவே இத்தகைய கருத்துக்களை மனதில் கொண்டு 1993ஆம் ஆண்டு எனது இறுதியாண்டுப்பரீட்சையின் பகுதியான ஆய்வேட்டு உருவாக்க கற்கை நெறிக்காக ஆற்றுகையைத் தேர்ந்தெடுக்க வைத்த பின்புலங்களை ஆராய விளைகின்றேன்.


கவிதை எழுதுவது,நாடகம் எழுதுவது,கட்டுரை எழுதுவது,நாடகம் நெறியாள்கை செய்வது, நடிப்பது, நடனமாடுவது, நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள், காண்பியக் கலைக் காட்சிப்படுத்தல்களில் ஈடுபடுவது என்ற அனுபவ பின்புலத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் நின்றியங்கும் அறிவுத் தொழிற்பாட்டையும், கட்டுரைகள், விமர்சன எழுத்துக்களில் நின்றியங்கும் கற்பனை,அனுபவம்,கலையாக்க அம்சங்களையும் விலத்திப் பார்க்க முடியவில்லை.


குறிப்பாக பல மனிதர்கள் சம்பந்தப்படுகின்ற ஆற்றுகைக் கலையான நாடக ஆற்றுகைக் கலையின் அறிவுத் தொழிற்பாட்டின் சாத்தியப்பாடுகள் வெளிப்படையானவை. தன்னிலைப்பட்டும் குழுநிலைப்பட்டும் கலை உருவாக்கத்திற்கான அறிவு நிலைப்பட்ட உரையாடல்களின் தொகுப்பில் நாடக ஆற்றுகை முழுமை பெறுகிறது.

அறிவுபூர்வமான உரையாடல்களற்ற நாடக ஆற்றுகை கற்பனை செய்து பார்க்க முடியாதது.விடயங்களின் யதார்த்தத் தன்மையும்,தர்க்கமும் இங்கு தவிர்க்க முடியாதவை.எனவே ஆய்வின் பாற்பட்டதல்ல என்று ஆற்றுகைக் கலையை கூறுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் வலிமை குன்றியவையாகவே காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் தான் குற்றாலக் குறவஞ்சி இலக்கியம் இறுதியாண்டு ஆய்வுச் செயற்பாடாக நடன நாடகமாகத் தயாரிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டது.


நடன நாடக கலையாக்கத்தில் நின்றியங்கும் அறிவுத் தொழிற்பாடு உரையாடலுக்குக் கொண்டுவரப்பட்டது. நாடகவாக்கத்தின் அனைத்துக் கூறுகளிலும் நின்றியங்கும் படைப்பாக்க, சிந்தனை,விமர்சன நோக்கு, கற்பனை தொழிற்படும் முகாமைத்துவமும்என்பவைஉணரப்பப்படுவதும், புரியப்படுவதும் நிகழும் பொழுது மேற்படி கற்பிதப் பிரிகோடு அழிந்தொழிந்து போகும்;, மாறாக அறிவு என்பது உணர்ந்தறியப்பட்டன.இந்த விடயம் விரிவாக எழுதப்பட வேண்டியது.


அறிவு என்பது புத்தாக்கத்துக்கானது என்பது பரீட்சைத் தேர்ச்சிக்கான கல்வியாக இருக்குமளவும் மேற்படி பிரிகோடு வலிமை பெற்றதாகவே இருந்துவரும். கல்வியின் நோக்கம் பற்றிய தெளிவான அறிதல் இங்கு அவசியமாகிறது. கல்வி என்பது தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையில் ஈட்டிக் கொள்ளும் அதியுயர் சித்திக்கானதாக கொள்ளப்படுவதும் கொண்டாடப்படுவதுமான சூழலில் மேற்படி புரிதலுக்கும் உணர்தலுக்குமான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்படும்.
அறிவியல் எழுத்துக்களில் ஆதாரங்கள் மேற்கோளாகக் கொடுக்கப்படுகின்றன.கலை ஆக்கங்களில் இவை உள்வாங்கப்பட்ட அனுபவங்களாகவும், உரையாடல்களாகவும் (பாடல் வரிகள்,கூற்றுக்கள்,பழமொழிகள்,புள்ளிவிபரங்கள்) இணைக்கப்பட்டிருக்கும்.


பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு


2000 ஆம் ஆண்டு எனது முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொள்ள முனைந்த பொழுது பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டை எடுத்துக் கொண்டேன். உள்ளுர் ஆய்வு முறைகளைத் தேடிக் கொண்டேன். ஆய்விற்குரிய விடயத்திற்கு உரித்தான மக்களுடன் இணைந்து பல வழிவகைகளிலான உரையாடல் முறைமைகளின் மூலமாக மேற்படி ஆய்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.


பாரம்பரியமாகக் கிராமங்களில் ஆடப்பட்டு வரும் கூத்துக்களின் சமகாலப் பொருத்தப்பாடுகள் சார்ந்து மேற்படி கலைப் பயில்வை மேற்கொள்ளும் சமூகத்தினருடன் இணைந்து தொடர்ந்து இயங்குவதன் வாயிலாக நிகழ்த்தப்படும் அறிவு,அனுபவப் பகிர்வுகள் வாயிலாக மேற்படி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இங்கு பிரதான ஓட்ட ஆய்வுப்பொறிமுறையில் தகவல் வழங்கிகளாகக் கையாளப்படும் ஆய்வின் உரித்தாளர்கள் அதன் முதன்மைப் பங்காளர்களாக இயங்குவது நிகழ்கிறது. ஆய்வாளர் அல்லது ஆய்வாளர் குழாம் ஆற்றுப்படுத்துனராகவும் பங்கேற்பாளராகவும் இயங்குவது நிகழ்கிறது.இந்த ஆய்வுச் செயற்பாடு களத்தில் அல்லது விடயம் சார்ந்து அறியப்படும் பிரச்சினைகள், ஏற்பட வேண்டிய,ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்பனவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். மாறாக அறிக்கை செய்வதாகவோ, ஆவணப்படுத்துவதாகவோ, ஆய்வு இதழ்களுக்கான விடயதானங்களாகவோ, நூலுருவாக்கத்துக்கான விடயங்களாகவோ சுருங்கிக் கிடக்காது.

பங்குகொள் ஆய்வுச் செயற்பாடானது சம்பந்தப்படும் அனைத்துத் தரப்பினரும் கொடுத்து வாங்கும் பகிர்வுப் பொறிமுறையினூடாக இயங்குவதாக இருக்கும். அறிவானது அதிகாரபூர்வமான தளங்களில் மட்டும் நிகழ்வதில்லை, நிகழ்த்தப்படுவதில்லை அது பல்வேறு தளங்களில் பல்வகைப்பட்ட முறைமைகளினூடாக நிகழ்த்தப்படுகின்றன என்ற நவீன அறிவாதிக்க நீக்கம் பெற்ற பார்வை கொண்டு இயங்குவதாக இருக்கும். இதற்கு காலனிய நீக்கப் பார்வை அடிப்படையாகும்.


காலனிய அல்லது நவீன அறிவு மற்றும் ஆய்வு முறைகள் கொண்டியங்கும் ஆய்வறிவு ஆதிக்க நிலைக்கு மாற்றான ஆய்வு என்பது விடயத்துடன் தொடர்புடைய மக்கள் தங்கள் நிலைப்பட்டு விடயங்களைக் கையாளுவதற்கான வழிமுறையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது.மாறாக விடயங்களை அறிந்து கொண்டு அவர்களைக் கையாளுவதற்கான முறையாக இயங்குவதை மறுதலிப்பதாக இருக்கின்றது. இது வெளிப்பாட்டு முறையிலும் தனக்கான வடிவங்களை எடுத்துக் கொள்ளும் கதைகள், பாடல்கள், காண்பியக்கலைகள், ஆற்றுகைகள்,கலைவிழாக்கள் என இவை விரியும்.


உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கஞ்செலுத்தும் ஆய்வு முறைமையின் தன்மைகள்


உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக் கழகங்களில் ஆய்வு என்பது மேற்கோள்கள் அடிக்குறிப்புகளுடன் உரைநடையில் எழுதப்படுவதாக இருக்க வேண்டுமென்ற கட்டிறுக்கமான வரையறைக்குள்ளேயே இயங்கி வருகின்றது.அதுவும் உன்னதமானவையாகக் கொள்ளப்படும் ஆங்கில ஆய்வேடுகளில் பிரசுரமாவதே இலக்காகக் காணப்படுவதை அவதானிக்கலாம்.
ஆய்வுக்குரிய விடயங்கள் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியவை, அந்த விடயங்களுக்கு உரித்தானவர்களுக்கு கிடைக்கபெற வேண்டியவை என்பது பற்றிய உரையாடல்கள் காணக்கிடைப்பதில்லை. ஆய்வுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல், தரவுகள் மூலமாக பிரச்சினைகள் அடையாளம் காணப்படுவது, அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கான காரணங்களை ஆராய்வது, தீர்வுகளை முன்வைப்பது என்ற வகையில் தனியாள் நிலையிலோ அல்லது குழு நிலையிலோ இது நிறைவேற்றப்படும்.


இதன் பிரயோகம் என்பது வேறு நபரின் பொறுப்பும் பணியும் என்பதான சிந்தனையாகவே நவீன அறிவுலகிற்குரியதாக இருந்து வருகின்றது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்களையும் அது சார்ந்த மக்களையும் ஆய்வுக்குரிய பொருளாகவும் தகவல் வழங்கிகளாகவுமே பார்க்கப்படுகின்றது, கையாளப்படுகின்றது. ஆய்விக்குரிய விடயம் சார்ந்த மக்களது அறிவு, அனுபவம், நிலைப்பாடு, பார்வை இங்கு கருத்தில் கொள்ளப் படுவதில்லை. தொடுக்கப்பட்ட கேள்விக் கொத்துகளுக்குவிடை பகிரும் இயந்திரங்களாகவே அவர்கள் கையாளப்படுகின்றார்கள். அவர்களைக் கைபற்றக் கூடிய வகையிலேயே கேள்விக் கொத்துக்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஏனெனில் நவீனமானதெனக் கொள்ளப்படுகின்ற காலனிய அறிவு அதன் இயல்பில் ஆதிக்கத்தன்மை கொண்டதாகவும் ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு கட்டத்திலும் வகுத்து வருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கல்விப்புலன்களில் கொண்டாடப்படும் மூத்தவர் இளையவர் பாகுபாடு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

நவீன ஆய்வறிவுலகம் வடிவமைத்திருக்கும் படிநிலைகள் மேற்படி ஆதிக்க ஏற்றத்தாழ்வுகளின் படிக்கட்டுக்களாகவே இருக்கின்றன. பட்ட நிலைகள் நிலைகளைத் தர நிலைகளைத் தீர்மானிப்பனவாக இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்டதான நிலைமையையே அறிவுநிலை கொண்டிருப்பதைக் காணமுடியும்.


காலனீயநீக்க ஆய்வு முறைமைகள்

இத்தகையதொரு பின்னணியில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு என்பது அறிவுநிலை மாற்றத்தினூடாகவே சாத்தியமாக முடியும். இது ஆய்வுக்கான மேலுமொரு முறையல்ல. இது நவீன ஆய்வு முறைமையின் மாற்றத்திற்கான ஆய்வு முறைமையாகும். நவீன அறிவியல் என்ற பெயரில் அல்லது போர்வையில் நிலைத்து நிற்கும் ஆதிக்க நோக்கம் கருதி அறிமுகப்படுத்தப்பட்ட காலனியாதிக்க அறிவுமுறையின் காலனிய நீக்க கோட்பாட்டு உரையாடல்களின் அடியாக மேற்கொள்ளப்படும் ஆய்வறிவுச் செயற்பாடாக இது அமையும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்தநிலை எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றது, எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது.


இந்தவகையில் உள்ளூர் ஆய்வு முறைமைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆய்வு முறைமைகள், விழிம்புநிலை ஆய்வுமுறைகள், பெண்ணிலைவாத ஆய்வுமுறைகள் எனப் பல வகைப்பட்டதான ஆய்வுமுறைகள் ஆதிக்க நீக்கத்துக்கானதாகக் கையாளப்பட்டு வருவதை அவதானிக்க முடியும். இது பிரதான ஓட்ட உயர் கல்வி நிறுவனங்களுள் சவால்களுடன் உள்வாங்கப்பட்டு வருகின்றன. அதேவேளை இவற்றிற்கான சமாந்தர ஆய்வறிவு வெளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.


உண்மையில் இங்கு ஆய்வறிவு என்பது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்டுப்பாடுகள் நீங்கிய வெளிகளில் இயங்குவது என்ற இருதளங்களுக்குரியதாகவே காணப்படுகின்றது. எனவே எந்தெந்த ஆய்வறிவு முறைமைகளை எவரெவர் எடுத்துக்கொள்வர் என்பது வெளிப்படையானது. எந்தமுறைகள் ஆதரவுக்கும் அனுசரணைக்கும் உரியதாக இருக்கும் என்பதும், எந்த முறைகள் ஒதுக்கலுக்கும், நிராகரிப்பிற்கும் உரியதாக இருக்கும் என்பதும், எவரெவர் எதனைக் கொண்டாடுவர் என்பதும் வெளிப்படை.
இத்தகையதொரு உரையாடலின் பின்னணியில் ஈழத்து நவீன அறிவுச் சூழலின் இயங்குநிலை எத்தகையதாக இருக்கின்றது என்பது கவனத்திற்குரியது. நவீனமென அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள் வராதவர்கள் பாமரர்கள் எனவே கொள்ளப்படுகிறார்கள். நவீன கல்விச் சாலையில் படித்து எழுதக் கையெழுத்து வைக்கத் தெரிந்து விட்டால் அவர் படித்தவராகக் கருதப்படுகிறார். காலனியம் திணித்துவிட்ட நவீனமானதெனக் கொள்ளப்படுகின்ற அறிவு அதற்கு முந்திய நூற்றாண்டுகள் கடந்த அறிவையும் அது உருவாக்கிய வாழ்வியலையும் மூடத்தனமானதாகவும், அறிவுபூர்வமற்றதாகவும் விஞ்ஞானபூர்வமற்றதாகவும் நிராகரிக்க வைத்திருக்கிறது.


உள்ளூர் அறிவுமுறை பாமரத்தனமானதாகவும் விஞ்ஞானபூர்வமற்றதாகவும் மிகவும் வெற்றிகரமாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது. பொது அறிவும் பொது உளச்சார்பும் படித்துப் பாடமாக்கி எழுதும் பரீட்சைக்கான விடயமாக்கப்பட்டிருக்கும் சூழலில் இதுவொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் இவற்றைக் கேள்வி கேட்கும் ஆற்றலை அதற்கான தைரியத்தை விருத்தி குன்றிப் போகச் செய்திருப்பதும் இவை பற்றி கேள்வி எழுப்பலாமா என்ற சந்தேகத்தையும், தைரியமின்மையையும் விருத்தியடையச் செய்திருப்பதும் நவீன அறிவியல் என்ற பெயரில் காலனியம் அறிமுகப்படுத்திய கல்வியும் அதன் முறைமையும் பெற்றிருக்கின்ற வெற்றியாகும்.


இத்தகையதொரு பின்னணியில் ஈழத்தமிழ்ச் சூழலில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் முக்கியத்துவமும் அதனை முன்னெடுப்பதில் எதிர்கொள்கின்ற சவால்களும், அவற்றின் தொடர் முன்னெடுப்புக்களின் தேவையையும் மட்டக்களப்பின் சீலாமுனைக் கிராமத்தில் எனது முதுமாணிப் பட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டு அனுபவங்களினை அடிப்படையாகக் கொண்டு உரையாடுவது அவசியமாகும்.
சமுதாயக் கலைகளும் பங்குகொள் ஆய்வும்
கலை நிகழ்ச்சிகள் மிகப் பெரும்பாலும் திறந்த வெளிகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதையும், நிகழ்த்தப்பட்டு வருவதையும் பாரம்பரியச் சூழலில் காண முடிகிறது. மேலும் இப் பாரம்பரிய வெளிகளில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகள் தனியான கலை நிகழ்ச்சிகளாக மட்டுமல்லாமல் விளையாட்டுகள், சடங்குகள் என்பவற்றுடன் ஒன்றிணைந்தவையாக இயங்குவதைக் காண முடிகிறது. இவ்வாறாக ஒருங்கிணைந்த வகையில் ஆற்றுகை செய்யப்பட்டு வரும் கலைகள் சமுதாயக் கலைகளாக இருப்பதைக் காண முடியும்.


சமூதாயமாக மக்கள் ஒன்றிணைந்து பகிர்ந்து பங்கேற்று நிகழ்த்திக் கொண்டாடும் வகையில் அமைந்திருப்பினும் இவற்றில் பெண்களின் பங்கேற்றல், பெண்கள் பற்றிய சித்திரிப்புகள் விமர்சனத்திற்கும் கேள்விக்குட்படுத்தலுக்கும் உரியவையாக இருப்பதும் ஆழ்ந்த கவனத்திற்குரியது இவற்றில் சிறுவர்களுக்குரிய இடமும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வருகிறது. எனினும் திறந்த வெளிகளில் நிகழ்த்தப்படும் கலைப் பயில்வுகளும் ஆற்றுகைகளும் தொடர்ச்சியான பார்வை அனுபத்திற்கூடான அறிவுப் பெறுகைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கிறது. இந்த அனுபவங்கள் அவர்கள் வயதுக்கு வரும் பொழுது இயல்பாகவும் இலகுவாகவும் ஆற்றுகை வெளிக்குள் இணையும் வாய்ப்பை வழங்குவதாக இருக்கிறது. இவ்வாறே பெண்களும் சிறுவர்கள் வாய் வழியாகவும், நேரடியாகவும், ஊரவர்களது உரையாடல்கள், வீடுகளில் நிகழும் பிளவுகளின் வழியாகவும் மேற்படி விடயங்கள் சார்ந்த அனுபவங்கள் கொண்டவர்களாகவும், பயிற்றுவிப்பாளராகவும் இயங்கவல்ல வாய்ப்புக்களை வழங்குவதாக இருக்கிறது.


கிராமிய தெய்வ சடங்குகளுடன் இணைந்ததாக அமையும் பாரம்பரியக் கலைகள் என அழைக்கப்படும் கிராமிய அல்லது உள்ளூர்க் கலைகள் சாதியத்தில் கட்டமைக்கப்பட்டதாகவும்; சாதியாக்கத்திற்கு சவால் விடுவதாகவும் இருப்பதையும் காண முடிகிறது. விடய ரீதியாகவும் சாதி மற்றும் பால் ஆதிக்கங்களை வலியுறுத்துவதாக இருக்கும் அதேவேளை விமர்சன ரீதியாக அணுகும் விடயங்களைக் கொண்ட ஆற்றுகைகளையும் காணமுடியும்.


இத்தகையதொரு சூழ்நிலையில் கேள்விகுட்படுத்தப்பட வேண்டிய விடயங்களை சமூகப் பங்குபற்றலுடன் கேள்விக்குட்படுத்தப்படுவது கூத்து மீளுருவாக்க செயற்பாட்டின் வழி முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை காலப்பொருத்தமின்மை கருதி சாதி பால் ஆதிக்க கூறுகள் கைவிடப்படுவதையும் மாற்றம் பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. உள்ளூர் கலைகள் அதன் உள்ளிருந்து இயங்கும் கலைஞர்களாலும் சமூகங்களாலும் சாதகமானதும் பாதகமானதுமான மாற்றங்களைப் பெற்று இயங்கி வருவதையும் காண முடிகிறது. இந்த இடங்களில் உரையாடகள் வேண்டப்படுகின்றன.


உதாரணமாக ஆற்றுகைகளுக்கான ஆடை அணிகலன்கள் சார்ந்து தொலைக்காட்சி தொடர்களாக வரும் காவிய ஆற்றுகை ஆடை அணிகலன்கள் உள்வாங்கப்படுகின்றன. அதேவேளை இழக்கப்பட்ட, மறக்கப்பட்ட அம்சங்களை மீளக் கண்டடைந்து வடிவமைக்கும் போக்கும் காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் உரையாடல்கள் பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இவ்வாறு உள்ளூர் கிராமத் தெய்வ வழிபாடுகளுடன் இணைந்ததாகவும்; அந்த வெளிகளில் நிகழ்த்தப்படுபவையாகவும்; அவற்றுக்கு வெளியே கிராமியக் கலை விழாக்களில் கொண்டாட்டங்களில் நிகழ்த்தபடுவையாகவும் இருந்து வருகின்றன. இந்த கலை முன்னெடுப்புகளும் அவை சார் உரையாடல்களும் அவற்றுக்கான வெளிகளில் நிகழ்ந்து வருகின்றன.


கலைகளை நவீனப்படுத்தலும் அதன் அரசியலும்
நவீன அறிவு என்ற பெயரில் காலனியம் அறிமுகப்படுத்திய கலை பற்றிய அறிவு மேற்படி கலைகளை பாமரத்தன்மையாகவும்; அதனைப் பயில்பவர்களை பாமரர்களாகவும் அறியத் தந்தது. இக்கலைகள் கைவிடப்பட வேண்டியவை என்ற நிலைப்பாட்டை நவீன அறிவு கட்டமைத்தது.


காலனியம் அறிமுகப்படுத்திய மண்டபத்தினுள் அமைந்த மேடைகளில் நிகழ்த்தப்படுவனவும் நிகழ்த்தப்படத்தக்கனவும் நவீனமானவையாக கொண்டாடப்பட்டன.
நவீன அறிவின் பின்புலத்தில் உள்ளுர்க் கலைகளை நவீன அரங்கிற்குரிய வகையில் தகவமைக்கும் பணியினை அறிஞர்களும் கலைஞர்களும் முன்னெடுக்கத் தொடங்கினர். நவீன அறிவு கட்டமைத்த கலையின் ஒரு பரிமாணத்தன்மையான மேடை ஆற்றுகையை மட்டுமே கலையெனக் கொண்டனர்.
கிராமிய சூழலில் பல்வகைப்பட்ட வெளிகளில் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர்ச் செயற்பாடாக அமையும் பல பரிமாணங்களைக் கொண்ட கலைகள் ஆற்றுகை மட்டுமேயான பார்ப்பதற்கான நவீன கலைப் பரிணாமம் கொண்டதாக மாற்றம் பெற்றது.


இத்தகையதொரு சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வகைப்பட்ட கலைகளும் மேடைக்குரியதாக தகவமைக்கப்பட்டு அதன் ஆற்றுகையும் அதற்கான அழகியலுமே வலியுறுத்தப்படுவதாக இருக்கிறது. சமுதாயப் பங்களிப்பு, பங்கேற்பு, திறந்த வெளிகளில் தொடர் பயில்வுகள் கொண்டாட்டங்கள் ஊடான ஆற்றுகை உருவாக்கம் அதன் அழகியல் கண்ணுக்கு புலனாகாததாகவும் கருத்திற் பதியாததாகவும் ஆக்கி விட்டிருக்கிறது.

நவீன சூழலில் வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் கலைத் திருவிழாக்கள் மேற்படி கலைகளின் இயல்பைக் கருத்திற் கொள்ளாமல் மண்டபத்தில் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்ட ஒரு பக்க பார்வையாளருக்கான காட்சியாகவே கட்டமைக்கப்படுகின்றன. காலனியம் அறிமுகப்படுத்திய நவீன அறிவைப்பெற்ற சமூகம் மேற்படி இரசனைக்குரியதாகவும் பார்வையாளர் நிலையில்; இருப்பதையுமே விரும்பியேற்பதாக இருந்து வருவது காணக்கூடியதாக உள்ளது.


உள்ளூர்க் கலைகள் ஒவ்வொன்றும் தமக்கேயான வெளிகளில் அவற்றுக்கான முறைமைகளில் அதற்கான பங்கேற்பு, பார்வையிடும் சமூகங்களுடன் ஆற்றுகை செய்யப்படுவன, அவற்றின் வித்தியாசங்கள் கவனத்திற் கொள்ளப்படாது புதிய நிலைமைகளுடன் சமரசம் செய்யக்கூடிய கலைஞர்களைக் கூலிக்கமர்த்தி கலை வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது.


கலைத்திருவிழாக்கள் எனும் எண்ணக்கருவாக்கம்
இத்தகையதொரு பின்னணியில் கலைத் திருவிழாக்களைத் திறந்த வெளிகளில் அவற்றுக்கான ஆற்றுகைச் சூழலில் நிகழ்த்துவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் பல்வகைப்பட்ட கலைஞர்களையும் சந்திக்கவும் உரையாடவுமான சூழலை ஏற்படுத்துவதும்; பல்வேறுபட்ட கலை மரபுகளைக் காணும் வாய்ப்புக்களை பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன.
பரந்ததொரு வெளியில் பல்வகைப்பட்ட உள்ளூர்க் கலைகளும் அவை ஆற்றுகை செய்யப்படுவதற்கான சுற்றுச்சூழலில் ஆற்றுகை செய்யப்படுவதும்; பார்வையாளர் தமது தெரிவுக்குரிய வகையில் ஆற்றுகைகளில் பங்கெடுக்கவும் பார்வையிடவுமான வகையில் இத்திருவிழா வடிவமைக்கப்பட்டிருக்கும். இத்திருவிழாவும் மேற்படி ஆற்றுகைக் கலைகள் நிகழ்த்தப்படும் ஆற்றுகை வெளிகளுக்கு ஆற்றுகைப்படுத்தும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கலைகள் ஆற்றுகை செய்யப்படும் இயல்பான வெளிகளின் மாற்றீடுகளாக இவை கருதப்படுவதில்லை. ஆனால் இச்சூழல் மேற்படி கலைகளின் இருப்புஇ அவை பேசும் விடயங்களின் பொருத்தப்பாடு சார்ந்து கலந்துரையாடும் களங்களாக வடிவங்கொள்ளும்.


போட்டிகளற்ற ஆற்றல்களைக் கொண்டாடும் கலைச் செயற்பாடாக சிறுவர்களுக்கென கலைத் திருவிழாக்கள் வடிவமைக்கப்பட்டன: சிறுவர் கலைத் திருவிழாக்கள் வடிவமைக்கப்பட்டன. இத்திருவிழாக்கள் பல்வேறு பட்ட வகைகளிலும் இடங்களிலும் நிகழ்த்தப்பட்டன.


கிராமங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கலைச் செயற்பாடுகளின் தொகுப்பாக கலைத் திருவிழாக்கள் கொண்டாடப்படும். சிறுவர்களுடன் கதை கேட்டு கதை சொல்லி மேலும் அக்கதைகளை விளையாடி விளையாடி ஆற்றுகையாக உருவாக்குவது. விளையாட்டுக்களை விளையாட வைத்து அதன் சாதக பாதக அம்சங்களை கேள்விகளை எழுப்புவதன் மூலமாக உரையாட வைத்து பாதக அம்சங்களை நீக்கி சாதக அம்சங்களை வலுப்படுத்தும் வகையிலான புதிய ஒழுங்குவிதிகளை உருவாக்கி வன்முறைத்தன்மையற்ற வகையிலும், பேதங்களற்ற வகையிலும் மீளுருவாக்கி விளையாடுதல், சுற்றுச் சூழலுடன் அறிமுகப்படுத்தல். அவை பற்றிக் கதைத்தல், எழுதுதல் கையெழுத்துப் பத்திரிகைகளை உருவாக்குதல். தாவர சாகியம் விலங்குச் சாகியம் பற்றிய குறிப்பான விளையாட்டுக்களை வடிவமைத்தல். பட்டிப் பொங்கல் கொண்டாடுவதன் மூலமாக மனித , விலங்கு, சூழல், வேளாண்மை, உற்பத்தி, இயந்திரமயமாக்கம், இரசாயன மயமாக்கம், இயற்கை வேளாண்மை பற்றிய உரையாடல்களை நிகழ்த்துதல். அவற்றை கலை இலக்கியங்களில் கொண்டு வருதல். ஆற்றுகை செய்தல், காட்சிப்படுத்தல் என இவை அமையும். மேலும் மரங்கள் செடிகளின் சிறப்புக்களை அறிய அவை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல். உதாரணமாக பூவரசு மரத்தின் கீழ் அதன் இலைகளை ஊது குழல்களாகச் சுற்றி ஊதி விளையாடுதல். பூவரசம் பூக்களில் பொம்மைகள் செய்து விளையாடுதல், பூவரசின் பயன்கள் பற்றி ஊரின் மூத்தவர்களை இணைத்து கலந்துரையாடுதல் என இந்த விளையாட்டுகள் அமையும்.


ஊரின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளின் தொகுப்பாக சிறுவர் கலைத் திருவிழாக்கள் கொண்டாடப்படும். இவ்வாறு சிறுவர் விளையாட்டு விழாக்களும் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படும். திருவிழாக்கள் என்பது சிறுவர்களின் பல்வகைப்பட்டதும் பல்தரப்பட்டதுமான ஆற்றல்களைக் கொண்டாடும் கலைக்களமாகும். போட்டி, பரீட்சை, வெற்றி, தோல்வி என்பது இங்கிருப்பதில்லை, சிறுவர்களின் ஆற்றல்கள், விருப்பங்கள் இனம் காணப்பட்டு ஆற்றுப்படுத்தல் மூலமாக அவர்களது வளர்ச்சிக்கு வழிவகை செய்வதாக தொடர் கலைச் செயற்பாடுகள் அமைவதுடன் அதன் கொண்டாட்டமாக கலைத் திருவிழாக்கள் நிகழ்த்தப்படும்.


சிறுவர் இல்லங்களிலும் இத்தகைய கலைத் திருவிழாக்கள் தொடர்ச்சியான கலைச் செயற்பாடுகளின் தொகுப்பாக நிகழ்த்தப்படுவது வாய்த்திருக்கிறது.


பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு இத்தகைய கலைச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத காரணத்தால் குறுகிய காலத்தில் ஒரு நாள் முதல் ஐந்து நாள் வரை இத்தகைய கலைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கலைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது முக்கியத்துவமுடையதாகும். ஏனெனில் பாடசாலைகளின் வழமையான நடைமுறையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டமாக அல்லாமல் எவரையும் கழித்துவிடாத அனைவருக்கும் உரியதான நிகழ்ச்சித் திட்டமாக இவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.


சிறுவர் கலைத் திருவிழாக்கள் திறந்த வெளிகளில் அதற்குரியதான சூழலில் நிகழ்த்தப்படும். சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊரவர்கள் கலந்து மகிழும் உரையாடிச் செல்லும் களமாக இது அமைந்திருக்கும். சிறுவருக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் உரியதான கொண்டாட்டக் களமாக சிறுவர் கலைத் திருவிழாக்கள் அமைந்திருக்கும். இத்திருவிழாக்கள் ஒவ்வொரு சிறுவருக்குள்ளும் உறைந்திருக்கும் வித்தியாசம் வித்தியாசமான ஆற்றல்களை, ஆளுமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதையும் அவர்கள் வளரவும் வளர்த்துச் செல்லவுமான திசைமுகங்களை இனங்காணவும் இத்திருவிழாக்கள் வழிசமைப்பதாக இருக்கின்றன.
ஆற்றுகை ஆய்வுகள், பங்குகொள் செயற்பாட்டு ஆய்வுகள் என்பவற்றின் தொடர்ச்சியாக ஆய்வு மாநாடுகளின் மாற்றமும் தவிர்க்க முடியாததாகியது. மரபு ரீதியான முறைமையில் ஆய்வுச் சுருக்கமோ அல்லது ஆய்வுக் கட்டுரையோ இருவேறு நிபுணர்களின் பரிசீலனைக்கு அனுப்பி அவர்களது ஒப்புதல் பெற்று படிக்கப்படுவதும் நிகழ்வதற்கும் மாற்றாக, குழுநிலையில் தொடர் செயற்பாடுஇ உரையாடல் என்பவற்றுக்கு ஊடாகஇ பல்வேறு வெளிப்பாட்டு முறைகளுடாக ஆய்வுக் கண்டடைவுகளை பகிர்ந்து கொள்வதும் உரையாடல் வாயிலாக அடுத்த கட்டம் அல்லது கட்டங்கள் பற்றிய திட்டங்கள், தீர்மானங்கள் மேற்கொள்வதாகவும் இவ்வமைப்பு காணமுடியும்.

குறித்த விடயம் சார்ந்து தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் அறிஞர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், தொழில்முறையாளர்கள் ஆய்வு மாணவர்கள் என வித்தியாசங்கள் கொண்ட குழுவினர் நேரடியான சந்திப்புக்கள் மூலமாகவும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் பல்வேறு இடத்தவர்களும் இணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள், உரையாடல்கள் சாத்தியமானதும் பொருத்தமானதுமான ஊடகங்களின் வழி அளிக்கை செய்யப்படுவதும், ஆற்றுகை செய்யப்படுவதும், காண்பியப்படுத்தப்படுவதுமாக இந்த ஆய்வு நெறிமுறை அமைந்து காணப்படும்.


இந்த வகையிலான ஆய்வு நெறிமுறைகள் பல தளங்களிலும் ஏற்றத்தாழ்வுகளற்ற தொடர்பாடலைச் சாத்தியமாக்குவதுடன் அறிவுருவாக்கத்தில் குறித்த விடயம் சார்ந்து பலதரப்பட்டவரது ஒன்றிணைவிற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் வாயிலாக பல தளங்களிலும் நிகழ்ந்து வரும் அறிவுருவாக்க முறைமைகளை அறிந்து கொள்ளவும்இ பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருப்பதுடன் நவீன ஆய்வு முறைகளின் அதிகாரத்தை கேள்விகுட்படுத்துவதாகவும் அறிவுருவாக்கத்தின் வித்தியாசங்களைக் கொண்டாடுவதாகவும் இருக்கும்.

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More