கூத்தரங்கின் இயக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிப்புவழங்கும் வளதாரிகளுள் உடைஒப்பனைக் கலைஞர்குறிப்பிடத்தக்கநபராவார். மத்தள அண்ணாவியார், ஏட்டண்ணாவியார், பிற்பாட்டுக்காரர் என்பவர்களுடன் கூத்தில் வரும் பாத்திரங்களுக்கான உடை, ஒப்பனைமற்றும் அணிகலன்கள்,கைப்பொருட்கள் என்பனவற்றைத் தயாரித்து வழங்கிவரும் கலைஞர்களின்பங்களிப்புமிக முக்கியமானதாக இருந்துவருகின்றது. ஒரு கூத்தின் அரங்கேற்றத்தில் இந்தஉடை,ஒப்பனைக் கலைஞரின் பங்குபற்றுகைமிகவும் இன்றியமையாததாகும்.
இந்தவகையில் மட்டக்களப்பின் பாரம்பரியஅரங்கவரலாற்றில் புகழ்பெற்றபலஉடைஒப்பனைக் கலைஞர்கள்பற்றியும் அவர்களுடையசெயற்பாடுகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளமுடிகின்றது. இவர்களுள் ஐந்துதசாப்தகாலமாகத் தொடர்ச்சியாக இயங்கிவரும் குறிப்பிடத்தக்க ஒருஉடைஒப்பனைக் கலைஞராக மட்டக்களப்பு கொம்மாதுறையினைச் சேர்ந்தகலைஞர் பாலிப்போடி கமலநாதன் அவர்கள் விளங்குகின்றார்.
1967 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைமிகப்பெரும்பாலும் மட்டக்களப்பின் வடபகுதியைச் (கல்குடாதேர்தல் தொகுதி) சேர்ந்த பல்வேறு ஊர்களிலும் நடைபெற்றுவருகின்ற பாரம்பரிய நிகழ்த்துகலை வடிவங்களுக்கான உடைஒப்பனைக் கலைஞராக இவர் செயலாற்றி வருகின்றார்.
1967 இலிருந்து இற்றைவரைக்கும் தான் உடை ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரியும் பாரம்பரியக் கூத்துக்கள் தொடர்பாக ஓர்எழுத்துப் பதிவினை இவர் பேணிவருகின்றமை கவனிப்பிற்குரிய விடயமாக இருக்கின்றது.
எந்தஊரில், எத்தனையாம் ஆண்டு,எந்தக் கூத்து ஆடப்பட்டது என்பதையும் அதில் பங்குபற்றிய பாத்திரங்கள் யாவைஎன்பதையும் அதற்குத் தான் வழங்கிய ஆடைகள்,அணிகலன்கள், கைப்பொருட்கள் எவை எவைஎன்பதையும் விபரமாகக் குறித்து இப்பதிவேட்டை இவர் பேணிவருகின்றார்.
இந்தவகையில் மட்டக்களப்பின்வடக்குப் பகுதியில் உள்ளடங்கும்ஊர்களானகதிரவெளி,வம்மிவெட்டுவான்,கட்டுமுறிவு,அம்பந்தனாவெளி,வாகரை,பனிச்சங்கேணி,மாங்கேணி,காயாங்கேணி,நாசிவன்தீவு,புணானை,வாகனேரி,கறுவாக்கேணி,கிண்ணையடி,பேத்தாளை,கல்குடா,கிரான்,கோரகல்லிமடு,பறங்கியாமடு,சந்திவெளி,பாலையடித்தோணா,முறக்கொட்டான்சேனை,சித்தாண்டி,வந்தாறுமூலை,களுவன்கேணி,கொம்மாதுறை,கொடுவாமடு, இலுப்பையடிச்சேனை,பாலர்சேனை,பூலாக்காடு,புலிபாய்ந்தகல்,திகிலிவெட்டை,ஆயிலையடிச்சேனை,முள்ளிவட்டவான்,மயிலவெட்டுவான்,கானந்தனை,தன்னாமுனை,சத்துருக்கொண்டான்மற்றும் குருக்கள்மடம்,அம்பிளாந்துறை,நாவிதன்வெளி,நாற்பதாம் கொலனிஆகியபல்வேறுஊர்களிலும் நடைபெற்றபாரம்பரிய கூத்தரங்கஆற்றுகைகளுக்குத் தன்னால் வழங்கப்பட்டசேவைகளைஉள்ளடக்கியதாக இப்பதிவு ஏடு காணப்படுகின்றது.
1967 ஆம் ஆண்டிலிருந்துமட்டக்களப்பின் வடக்குப்பகுதிஊர்களில் நடைபெற்றுவரும் பாரம்பரியஅரங்கஆற்றுகைகள் பற்றியஒருதொகுதிவரலாற்றை இவருடைய இந்தகாத்திரமானஆவணத்தினூடாகநாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.இவருடைய இச்செய்கைநமதுபாரம்பரியக்கலைஞர்கள்எவ்வாறுதமதுகாலத்துவரலாறுகளைத் தாம் சார்ந்ததுறைகளுக்கூடாகபதிவாக்கஞ் செய்துவந்துள்ளார்கள் என்கின்றமரபுகளைப்பற்றிஆராய்ந்தறிவதற்கானவழிகளையும் திறந்துதருகின்றது.
கூத்தரங்கின் உடைஒப்பனைக் கலைஞராகவும்ஏறத்தாழஅரைநூற்றாண்டுகால கூத்தரங்கதகவல்களைப் பதிவுசெய்துள்ளஆக்கபூர்வமானஒருவரலாற்றுப் பதிவாளனாகவும் விளங்கும் கலைஞர் பா.கமலநாதன் அவர்கள் 1948 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17 ஆந் திகதிசந்திவெளிஎனும் ஊரில் பாலிப்போடிதங்கப்பிள்ளைதம்பதிகளுக்கு மூத்தமகனாகப்பிறந்தார்.குடும்பத்தில் மூன்றுஆண்களுக்கும் மூன்றுபெண்களுக்கும் இவர் மூத்தசகோதரன்.
இவருடையதந்தையானபாலிப்போடிசந்திவெளியின் புகழ்பெற்றஅண்ணாவிமாருள் ஒருவர். இதனால் தந்தையாருடன் சிறுவயதிலிருந்தே கூத்தரங்குகளுக்குச் செல்வது இவருக்கு இயல்பாகிப் போனது. மத்தளம் வாசிப்பதில் தேர்ச்சியும் பெற்றார். ஆனாலும் கூத்துக்கானஆடைகளையும் ஆபரணங்களையும் வடிவமைப்பதிலேயே இவருக்குமிகுந்தஆர்வம் இருந்துள்ளது. சிறுவயதில் கூத்துக்களைப் பார்த்துவிட்டுஅதனைப் போலச்செய்துவிளையாடும் போதுபலா இலை,தென்னஓலைமுதலியவற்றைப் பயன்படுத்தி கூத்துஆடும் தனதுநண்பர்களைகூத்தர்களாகவடிவமைப்பதிலேயேதான் ஆர்வத்துடன் ஈடுபட்டதாகத்தனதுஆரம்பத்தை இவர் சொல்லிமகிழ்கின்றார்.
பின்னாட்களில் வர்ணக்கடதாசிகளைப் பெறும் வாய்ப்புக்கள் கிடைத்தபோதுதான் கூத்தர்களுக்கானஉடைகளையும் பொருட்களையும் உருவாக்கியதாகவும் தன்னுடைய இருபதாவதுவயதிலேயேதனதுஊரானசந்திவெளியில் ஆற்றுகைசெய்யப்பட்ட’தெய்வபக்தி’எனும் மேடைநாடகத்திற்குரியவேடஉடைகளைத்தயாரித்துக் கொடுத்ததாகவும் இதற்காக இருபதுசதம் கிடைத்ததாகவும் பின்னாட்களில் ஊர்கள் தோறும் கூத்துக்களும்,இதிகாச,புராணமேடைநாடகங்களும் நடைபெற்றசூழலில் தன்னிடம் வேடஉடைகளைக் கேட்டுஆட்கள் வருவதுஅதிகரித்தமையால் தான் இதனைஒருதொழில் துறையாகவேவிருத்திசெய்ததாகவும் இவ்வாறுதான் 1967 இலிருந்து இற்றைவரைக்கும் செய்துவரும் பணியினைப் பதிவுசெய்துவைத்துள்ளதாகவும் கூறுகின்றார்.
கூத்தர்களுக்கானபூமுடி,கிரீடம்,முடி,பதக்கம், இடுப்புப்பட்டி,கைக்கட்டு,கைப்புஜம்,காப்ப,வாஸ்,கோட் முதலியவற்றுடன் மரவுரி,சிவன் உடுப்பு,நாரதர் உடுப்பு,பண்டாரம் உடுப்பு,முனிஉடுப்பு,பூதங்களுக்கானஉடுப்பு,சடாயுஉடுப்பு,அனுமார் உடுப்பு,புலியுடுப்புஎன்பனவற்றையும்,கட்டாரி,வில்,அம்பு,தண்டாயுதம்,கேடயம்,வாள்,வச்சிரவாள், சூலம்,வேல்,அம்புறாக்கூடு,கலப்பை,சக்கரம், குழல் முதலியகைப்பொருட்களையும்,கால்சதங்கை,மத்தளம்,சல்லாரிமுதலான இசைக்கருவிகளையும்வாடகைக்குக் கொடுப்பதனூடாகவும், கூத்தர்களுக்குஒப்பனைசெய்வதன் மூலமாகவும் தனதுவாழ்வாதாரத்திற்கானஒருபகுதிவருவாயினைப் பெற்றுக் கொள்கின்றார். இத்தோடுசைவஆலயங்களுக்குமயில்,எருது, சூரன்,எலி,குதிரை,திருவாசிமுதலியசிற்பங்களைமரத்தில் வடிவமைத்துவழங்கியும் வருகிறார். கூடவேசப்பரம் வாடகைக்குவிடுவதனையும் மேற்கொண்டுவருகின்றார்.
அண்ணாவியார் பா.கமலநாதனாக…
ஒருஉடைஒப்பனைக் கலைஞனாகத் தன்னை அடையாளப்படுத்திய பா. கமலநாதன் அவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒருஅண்ணாவியாருக்கானதகுதிகள் கொண்டவர்.தனது இளமைக்காலத்தில் கூத்துக்கள் பலஆடியவர், மத்தளம் வாசிப்பதில் தேர்ச்சிமிக்கவர். இதனைஅவர் மூன்று கூத்துக்களைப் பயிற்றுவித்து அரங்கேற்றியதனூடாக நிரூபித்துள்ளார்.
அதாவது தனது பிறந்த ஊரான சந்திவெளியில் ‘பிரளாபதியுத்தம்’எனும் வடமோடிக் கூத்தின் அண்ணாவியாராக அதனைப்பயிற்றுவித்து கோவில் திருவிழாக்காலத்திலே அரங்கேற்றினார். சந்திவெளியைச் சேர்ந்தபாரம்பரியக் கூத்துக்கலைஞர்கள் இதில் பங்குபற்றியிருந்தார்கள். இதேபோல் தான் புகுந்தஊரானகொம்மாதுறையில் ‘பவளக்கொடி’வடமோடிக் கூத்தினை அண்ணாவியாக நின்று பயிற்றுவித்துஅரங்கேற்றினார்.
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில்
2013 ஆம் ஆண்டு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களுக்கு’கண்டியரசன்’ தென்மோடிக் கூத்திற்கான அண்ணாவியாராகச் செயலாற்றி அக்கூத்தைப் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார்.
இதேவேளைநுண்கலைத்துறையில் தயாரிக்கப்பட்ட ‘அலங்காரரூபன்’– தென்மோடிக்கூத்து,’வீரகுமாரன்’ – வடமோடிக்கூத்து,’நொண்டிநாடகம்’–தென்மோடிக்கூத்து, ‘மழைப்பழம் ‘சிறுவர்களுக்கான வடமோடிக் கூத்து முதலிய கூத்துக்களுக்கான உடை ஒப்பனைக் கலைஞராகவும் பங்குபற்றி பணியாற்றியுள்ளார்.
கூத்தருக்கான வேடஉடை, ஒப்பனை தொடர்பாக நுண்கலைத்துறை மாணவர்களுக்குச் செயல்முறை ரீதியில் பயிற்சிகளைவழங்கும் பாரம்பரிய வளவாளராகவும் இவர் பணியாற்றிவருகின்றார்.
மகிடிக் கூத்தரங்கில்…
மட்டக்களப்பில் மகிடிக் கூத்து வருடாவருடம் நடத்தப்படும் ஊராக சந்திவெளி திகழுகின்றது. ஒவ்வொரு சித்திரைவருடப் பிறப்பையடுத்து சந்திவெளியில் மகிடிக் கூத்து நடைபெற்றுவருகிறது. கடந்த 2019 இலும் நடைபெற்றிருந்தது. இவ்வூரில் நடைபெறும் மகிடிக் கூத்தில் திரு.பா.கமலநாதன் அவர்களுடையபங்களிப்புமிகுதியானது. தனதுதந்தைக்குப் பின்பிருந்துசந்திவெளிமகிடிக் கூத்தில் இவர் பிரதானபங்களிப்புவழங்கிவருகின்றார். புதிய இளந்தலைமுறையினரிடையேமகிடிக்கூத்தரங்குபரிச்சயமாவதற்கானபணிகளை இவர் வருடாவருடம் தனதுபிறந்தகமானசந்திவெளியில் மேற்கொண்டுவருகின்றார்.
மகிடிக் கூத்தரங்கின் கட்டமைப்புஅதன் ஆற்றுகைமுறைமைகள் தொடர்பானசெயல்முறைஅனுபவமும் தேர்ச்சியும் உள்ளகலைஞராக இவர் நம்மத்தியில் இயங்கிவருகின்றார்.
புலிக்கூத்தரங்கில்
மட்டக்களப்பில் பயில்நிலையிலுள்ளபுலிக்கூத்தில் செயற்படும் கலைஞர்களுள் ஒருவராகவும் திரு.பா.கமலநாதன் அவர்கள் திகழுகின்றார்.பலாச்சோலையிலுள்ளகாளிகோயிலைஅண்டியபகுதியில் ஆற்றுகைசெய்யப்படும் புலிக்கூத்தில் இவர் பங்குபற்றிவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
பாடசாலைதமிழ்மொழித்தின கூத்துக்களில் இவருடையபங்களிப்பு
இலங்கையில் கல்வித்திணைக்களத்தால் வருடாந்தம் தமிழ்மொழிமூலபாடசாலைகளில் நடத்தப்பட்டுவரும் தமிழ்மொழித்தினநிகழ்ச்சிகளில் ஓரம்சமாகபாரம்பரியக் கூத்துப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. படச்சட்டமேடையில் ஒருமணித்தியாலத்திற்கும் உட்பட்டநேரத்தில் ஆடத்தக்கவாறு இக்கூத்துப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இப்போட்டிகளுக்கான கூத்துக்களைத் தயாரிக்கும் கலைஞர்களுள் பா.கமலநாதன் அவர்களும் ஒருவராகஅடையாளங் காணப்படுகின்றார்.
இவர் தம்பலகாமம்,வெருகல் பூநகர், பனிச்சங்கேணி, செங்கலடி, மண்டூர் 40 ஆம் கொலனிமுதலிய இடங்களிலுள்ளஅரசாங்கப் பாடசாலைகளில் தமிழ்மொழித்தினப் போட்டியின் பொருட்டுமேற்படிமேடைக் கூத்துக்களைத் தயாரிக்கஉதவியுள்ளார். மாணவர்களுக்கு கூத்துஆட்டங்களையும்,பாடல்களையும் பயிற்றுவித்து, உடை,ஒப்பனைகளைச் செய்துமத்தள அண்ணாவியாகவும் செயற்பட்டுபாடசாலைகளில் தமிழ்மொழித்தின கூத்துக்கள் உருவாகபெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
அண்மையில் கொரொனாவிழிப்புணர்வுதொடர்பில் சந்திவெளியைச் சேர்ந்தகலைஞர்களால் கூத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்ட ஆற்றுகையிலும் பா.கமலநாதன் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கியிருந்தார்.
இவ்வாறு தனது வாழ்வின் பெரும் பகுதியைபாரம்பரியக் கலைகளுடன் சம்பந்தப்படுத்தி சக மனிதர்களையும் மகிழ்வித்து தானும் மகிழ்ந்துவாழும் மாண்புக்குரிய கலை ஆளுமையாக உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியாருமாகியபா.கமலநாதன் அவர்கள் விளங்குகின்றார். இவருடையவாழ்வையும் பணிகளையும் படிப்பினைகளாகக் கொண்டு இவருடையஅறிவையும் அனுபவங்களையும் புதியதலைமுறையினர் பெற்றுக்கொள்ள வழியமைத்து இவரை மாண்பு செய்வோம்.