தமிழர் வாழ்வில் ஒன்றித்திருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் கையை விட்டுப்போனமையே இன்று மருந்தும் கையுமாக தமிழர்கள் அலையும் நிலைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுவதனை முழுமையாக மறுக்க முடியவில்லை.
இன்று இரு தலைமுறைக்கு முன்பு நெல்லிணை கையாள் குற்றி அதில் சோறாக்கி கறி வைப்பதற்கு தேங்காய் சொட்டும் மிளகாயும் அம்மியில் அரைத்து மாலை உணவிற்கு மரவள்ளி மா, அல்லது ஒடியல் மா இடித்து பிட்டு அவித்து உண்ட தேகங்கள் குறைந்தது 85 வயதுவரை வாழ்ந்தனர் சிலர் 100 வயதினையும் அண்மித்தனர். ஆனால் இன்று இவை காட்சிப் பொருளாக மாறிவிடுமோ என்கின்ற அச்சம் எழுகின்றதோடு இதன் மூலம் தொழில் வாய்ப்பை இழந்த நூற்றுக் கணக்கான குடும்பங்களின் அவலமும் மறக்கப்படுகின்றது.
அம்மி, ஆட்டுக்கல், உரல், திருகை போன்றவை தயாரித்த பின்பு அதன் பயன்பாட்டிற்காக பொழிய வேண்டும். இதனை பொழிவதற்கு முன்பு இவற்றினை விற்பனை செய்யும் இடங்கள் மட்டுமன்றி அங்கு பயிற்சி பெற்ற பல நூறுபேர் கிராமங்களிலும் பொழி தொழிலை மேற்கொண்டபோதும் இன்று ஒரு சிலர் மட்டுமே இத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
இத்துறையில் 35 வருட அனுபவம் கொண்ட நாவாந்துறையை சேர்ந்த வே.ரவி என்னும் 4 பிள்ளைகளின் தந்தை இத் துறை தொடர்பில் தனது அனுபவத்தை தொழில் கிடைத்த இடத்தில் பகிர்ந்துகொள்கின்றார்.
எனக்கு தற்போது 49 வயது. 35 வருடமாக இந்த தொழில்தான் சோறு போட்டதோடு முழுமையான குடும்ப வருமானமும் போதிய அனுபவம் உடைய கைவசம் உள்ள ஒரே தொழில் இதுதான் . என்ன நாவாந்துறை வில்லூண்டியடில் வசிக்கின்றேன். இந்த தொழில் நாம் இருக்கும் இடம் தேடி வருவது கடினம். அதற்கே ஒரு பெரிய செலவு ஏற்படும் என்பதனால் நாம்தான் தொழிலை தேடி வீடு , வீடாக சென்று பணியாற்றுவோம். முன்பு பல கடைகள் கானப்பட்ட சமயம் அங்கே புதிதாக உற்பத்தி செய்யும் சமயம் ஒரே இடத்தில் போதிய தொழில் வாய்யப்பு இருந்தது. அதேநேரம் புதிய உற்பத்தியுடன் பொழிவிற்காகவும் வாடிக்கையாளர்கள் எம்மை நாடானர்.
கிரைன்டர், மிக்சி , அரைக்கும் ஆலைகள் எமது தொழிலை ஆக்கிரமித்தன.
இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் அதாவது கருங்கல் எடுத்தல், அதனை வகைப்படுத்தல், ஏற்றி இறக்கல், பின்பு பொழிவு மூலம் உற்பத்தி , அதனை பொழிய என பல நூறு இடங்களில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிய தொழில் மிக்சி, கிறைன்டர், அரைக்கும் ஆலை என்பன வந்தமையினால் எமது தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து இன்று அழிவடையும் நிலமைக்கே சென்றுவிட்டது. இதேபோன்று தொழில் வாய்ப்பு குறைவடைவதனால் இதனை பழகவும் அடுத்த தலைமுறையும் பின் நிற்கின்றது.
ஏற்கனவே கொள்வனவு செய்து வீடுகளில் உள்ள அம்மி, ஆட்டுக்கல், திருகை என்பன இன்று எத்தனையோ வீடுகளில் பயன்பாடு இன்றி எதற்கு பயன்படுத்துவது என தெரியாமலும் காத்திருக்கின்றன. இவைதான் இயந்திர வாழ்க்கை எனப் புரிந்து கொண்டோம். இதேநேரம் தமிழர்கள் என்னதான் இயந்திர வாழ்க்கைக்கு மாறினாலும் பழமையை கைவிட்டு அனைத்தும் இயந்திர மயமாகியமகயே முன்பு அறிந்திராத புது புது நோய்களிற்கும் காரணம் என இந்த படியாத ஏழை கூறினால் அது சபை ஏறாது என்றார்.
கலாசாரம் அல்லது மரபின் காரணமா எமக்கு தற்போதும் தொழில் கிட்டுகின்றது.
தமிழ் மக்களை பொறுத்த மட்டில் அவர்களிடம் பல மரபு உண்டு அதாவது கலியாண வீட்டில் அம்மி மிதிப்பது ஒரு பெண் பிள்ளை பருவமடைந்தாள் பராமரிப்பது . மகப்பேற்றின்போது தாய்மாரை பராமரிப்பது அதாவது பராமரிப்பு என்றாள் அது தனியான உணவு பழக்க வளக்கம் அதற்கு அரைச்ச கறியினையே தயார் செய்வார்கள் அப்போது கண்டிப்பாக அம்மியை தேடி எடுப்பார்கள் . அப்படி எடுக்கும்போது அதனை பொழிய வேண்டிய நிலமை ஏற்படும் இதனால் எமக்கான தொழில் வாய்ப்பு கிட்டும்.
இதேநேரம் தொழில் வாய்ப்பைத் தேடி ஊர் ஊராக தற்போது நாமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது கிடைக்கும் வருமானத்தில் குடும்ப வாழ்வாதாரம் உருளும். ஆனால் மழை காலம் தற்போது போன்ற கொரோனா காலம் என்றால் அதுகும் சிரமம்தான் இன்றும் அம்மியின் பாவனை அதிகமாக கானப்படும் கிராமங்களாக கரையூர், பொலிகண்டி,வல்வெட்டித்துறை, சக்கோட்டை, திக்கம், நிலாவறை , தம்பசிட்டி ஆகிய கிராமங்கள் உள்ள அப்பகுதிகளிற்கு செல்லும்போது அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.
பாவனையாளர் ஓருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இன்று எனக்கு 69 வயது என்னால் இனி அம்மியில் அரைக்கவோ உரலில் குற்றவோ முடியாது. சின்ன வயதில் நாம் வீட்டில் சும்மா இருந்தோம் இவற்றினை செய்தோம். ஆனால் தற்போது பெண் பிள்ளைகளே அதிகம் கற்கின்றனர், பலரும் வேலைக்கு செல்வதனால் இவற்றிற்கான நேரம் கிடைப்பதில்லை. அதனாலேயே மிக்சி, கிறைன்டரை நாடுவதோடு அரிசியை றைஸ் மில்லிற்கும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அதேநரம் நான் 23 வயதில் 450 ரூபாவிற்கு ஆட்டுக்கல்லும், அம்மியும் வேண்டினேன் . ஆனால் இன்று அவற்றை ஒருக்கால் பொழிவதற்கு 600 ரூபா வழங்க வேண்டும். எல்லாம் கையும் கணக்கும் சரியாகவே உள்ளது என்றார்.
#ஆட்டுக்கல்லு #அம்மி #உரல் #திருகை