சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மஹர சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்து மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (25.11.20) சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிர் பாதுகாப்பு குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபேசேகேர, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதை அடுத்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது” என மனித உரிமைகள் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவேகம தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
”ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சுகின்றோம். இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தவும், உங்கள் காவலில் உள்ள நபரின் உயிரைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்கவும் உங்களை வலியுறுத்துவதற்காகவே நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம். அபேசேகேர வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
நவம்பர் 30ஆம் திகதி முன்னர் ஷானி அபேசேகரவின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியவிடம், ரமணி முத்தெட்டுவேகம கோரிக்கை விடுத்துள்ளார்.
#ஷானிஅபேசேகர #மஹரசிறைச்சாலை #கொரோனாகுற்றப் #புலனாய்வுத்திணைக்களம்