துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட ராணுவப்புரட்சி மக்கள் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என குற்றம் சுமத்திய ரையிப் எர்டோகன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாா்.
அதன்படி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவ அதிகாரிகள், காவல்துறையினா் மற்றும் அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற இறுதி விசாரணையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
எனினும் எத்தனை பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவலை துருக்கி நீதித்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #துருக்கி #ஆட்சிகவிழ்ப்பு #ஆயுள்தண்டனை #ரையிப்எர்டோகன் #ராணுவப்புரட்சி