பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மத்திய பகுதியில் கறுப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தாக்கியதனை காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து 3 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத சம்பவம், பிரான்ஸ் பாதுகாப்புப் படையினாின் நடத்தை தொடர்பாக மேலும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை இடமபெற்ற வேறொரு சம்பவத்தில், குடியேறிகளின் தற்காலிக முகாம்களை அகற்றியபோது தேவையற்ற பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதாக காவல்துறை மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் முகங்களைக் காட்டும் வகையில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்னும் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முயற்சி செய்துவரும் நிலையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
லூப்சைடர் (Loopsider) என்ற செய்தி இணையத்தளம் வெளியிட்ட வீடியோ பதிவில் மைக்கேல் என்றழைக்கப்படும் குறித்த கறுப்பின இசைத் தயாரிப்பாளர் தமது ஸ்டுடியோவில் நுழைந்ததும் குறிப்பிட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளும் குத்துவதும், உதைப்பதும் காணப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் முகக் கவசம் அணியாததற்காக தடுத்து நிறுத்தப்பட்ட தான் ஐந்து நிமிடங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்நேரத்தில் தாம் இனவாத வசைகளுக்கு இலக்கானதாகவும் மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.
மைக்கேல் கைது செய்யப்படுவதை எதிர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதும் அரசு தரப்பு தற்போது இந்த குற்றச்சாட்டுகளைக் கைவிட்டுவிட்டு, அந்த காவல்துறைஅதிகாரிகள் மீது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்வதற்காக நேற்று வியாழக்கிழமை காவல்துறை தலைமையகத்துக்கு சென்றிருந்த மைக்கேல் தன்னைப் பாதுகாக்கவேண்டியவர்களே தாக்கினார்கள். இப்படி நடத்தப்படுவதற்கு உரிய எந்த தவறையும் தான் செய்யவில்லை , சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என விரும்புவதாகவும் பத்திாிகையாளா்களிடம் தொிவித்துள்ளாா். #பிரான்ஸ் #கறுப்பின #இசைத்தயாரிப்பாளர் #இடைநீக்கம் #மைக்கேல்