இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழகப் பேரவையினால் தனிநபர் விசாரணை ஆயம் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆயத்தினால் தண்டனை முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்டபடி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளை பல்கலைக்கழகப் பேரவை நேற்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் வணிக முகாமைத்துவப் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா.நடராஜசுந்தரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 130 பக்கங்களைக்கொண்ட விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்ட தண்டனைகளின் அடிப்படையில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்ட தண்டணைகளை அதன் தலைவரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவு உறுப்பினர் கே.ருஷாங்கன் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, அடுத்து வரும் நாட்களில் மாணவர் ஒவ்வொருவருக்குமான தண்டணைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது.

 பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, மூன்றாம் வருட மாணவர்கள் மூவருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் (இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், நால்வருக்கு நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குரிய இந்த ஏழு பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது, கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தினுள் அவர்கள் வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தற்போது இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்டன.

மேலும், தற்போது தண்டணை அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்டது. அவை அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து, கலைப்பீடச் சபையினால் அடையாளங்காணப்பட்டு உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேரில் 12 பேருக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அவர்களுக்கும் எதிர்காலத்தில் மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது என்றும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கைக் கடிதம் ஒவ்வொருவருக்கும் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும், இவர்களை விட மீதி இரண்டு பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்கள் என்பது அறியப்பட்டதன் காரணமாக அவர்கள் இருவரும் தண்டணைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு இரண்டாம் வருட மாணவர்களுக்கு இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #யாழ்பல்கலை #தண்டனை #பேரவை #மோதல் #அபகீர்த்தி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.