சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற காவற்துறை பொறுப்பதிகாரி தடை விதித்த் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து விளக்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்க பானை கட்டி , விளக்கேற்ற ஆலய இளைஞர்கள் தயாரான நிலையில் அங்கு சென்ற சுன்னாகம் காவற்துறையினர், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு காவற்துறைப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
காவற்துறை அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி மாவீரர் நாள் தீபம் ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே நிகழ்வுக்கு தடை விக்கப்பட்டதாக சுன்னாகம் காவற்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அங்கு வந்த காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் அடித்து அநாகரியமாக நடந்துகொண்டார்.
அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஆலய இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அதன் போது, “இதனை வெறுமனே நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு எதிராக எமது சமய குருமார்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என எல்லோரும் ஒட்டு மொத்த எதிர்வினையை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். மக்கள் துணிச்சலோடு எமது சமய பாரம்பரிய விளக்கீட்டை மேற்கொள்ளுங்கள். நாம் சட்ட ரீதியாக அனைத்துவிதமான பாதுகாப்புக்களையும் வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் உறுப்பினர் இ.வி.எஸ் செந்தூரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபருடன் உரையாடிய அமைச்சர், இந்துக்களின் பாரம்பரிய வழிபாடான கார்த்திகை தீபத்திருநாளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கும் சொர்க்கைப்பானை எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த வழிபாட்டை சிலர் பிழையாக அர்த்தப்படுத்தி முறைப்பாடுகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர், பிரதிப் காவற்துறை மா அதிபருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.
அத்துடன், சுன்னாகம் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீபங்களை ஏற்றுவதும் சொர்க்கப்பானை எரிப்பதும் கார்த்திகைத் திருநாளில் இந்துக்களின் மரபு, இதனை பிழையாக அர்த்தப்படுத்தி தடை விதிக்கவேண்டாம் என கூறியுள்ளார்.
உடனடியாக அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி அமைச்சருக்கு உறுதியளித்துடன் , ஆலயங்களில் தீபம் ஏற்ற அனுமதியளித்தார்.
#சுன்னாகம்காவற்துறை #கார்த்திகைதீபம் #மல்லாகம் #கோட்டைக்காடு #சாளம்பைமுருகன்ஆலயம்