யாழ்.பல்கலை வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட பல்கலைகழக மாணவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை காவல்துறையினர் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
அதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு காவல்துறையினா், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் காவல்துறையினரின் தடைகளை மீறி பல்கலை வாயிலில் விளக்கேற்ற முற்பட்டபோது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #தடைகளைமீறி #விளக்கேற்ற #மாணவன் #கைது #யாழ்பல்கலை #தீபங்கள் #கார்த்திகைதீபம்