வட்டுக்கோட்டை காவல்துறையினரின் பொறுப்பற்ற செயலினால் , வீட்டுக்காணி ஒன்றின் வீதியோர வேலி பகுதிகளவில் எரிந்துள்ளது.
கார்த்திகை விளக்கீடான நேற்றைய தினம் அராலி – வட்டுக்கோட்டை வீதியில் , இனம் தெரியாத சில ரயர்களை கொளுத்தியுள்ளனர்.
அவ்வேளை வாகனத்தில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் அவ்வீதி வழியாக வந்த போது வீதியில் எரிந்து கொண்டிருந்த ரயர்களை வீதியோரமாக உள்ள வேலிகள் மீது தூக்கி வீசியுள்ளனர்.
அதனால் வேலி தீப்பிடித்து எரிய தொடங்கியது. அவ்வேளை அவ்வீதியால் வந்த இருவர் தீயினை அணைக்க முற்பட்ட வேளை காவல்துறையினர் அவர்களை தீயை அணைக்க விடாது தடுத்து நிறுத்தி, அவர்களை அவ்விடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு பணித்துள்ளனர். அதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை வேலி தீ பிடித்து எரிந்ததை அடுத்து வீட்டாரும் , அயலவர்களும் ஒன்று கூடி தீயை அணைக்க முற்பட்ட போதும் காவல்துறையினர் தடுக்க முற்பட்டனர். இதனால் அவ்விடத்தில் காவல்துறையினருக்கும் அங்கு கூடியோருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் , காவல்துறையினர் அங்கிருந்து நழுவி சென்றனர்.
அதன் பின்னர் அங்கு கூடியோர் வேலியில் பற்றிய தீயை அணைத்தனர். வேலி தீப்பற்ற ஆரம்பித்த உடனையே தீயை அணைக்க காவல்துறையினர் தடுத்திருக்கா விடின் வேலி சிறிதளவே எரிந்திருக்கும் எனவும் , காவல்துறையினரின் பொறுப்பற்ற செயலால் பெருமளவான வேலிப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது என வீட்டார் கவலையுடன் தெரிவித்தனர். #வட்டுக்கோட்டை #வேலி #கார்த்திகைவிளக்கீடு