மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மொஹமட் தாஹீர் மொஹமட் லபார் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை நீதித்துறை வரலாற்றில் 25 வருட கால அனுபவம் கொண்டவர் இவராவர். 1995ஆம் ஆண்டு நீதிபதியாக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் குளியாப்பிட்டிய, காலி, பாணந்துறை, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றியதோடு 2010ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பிரதிச்செயலாளராகவும் பணிபரிந்துள்ளார்.
இவர் கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்திலிருந்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுகையில் நீதி வழங்குவதிலுள்ள காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு 2007ஆம்ஆண்டு மார்கழி 13ஆம் திகதியன்று ஒரே நாளில் 120 தீர்ப்பு மற்றும் கட்டளைகளை ஆக்கியிருந்தார். இது பலராலும் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பாராட்டப்பட்டதுடன் சில ஊடகங்கள் அதனை ‘உலக சாதனை’ எனவும் எழுதியிருந்தன.
மல்வானையை சொந்த இடமாகக் கொண்ட காலஞ்சென்ற தாஹீர் காஜியார் மற்றும் திருமதி சித்தி சரீபா ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர் தன்னுடைய பாடசாலைக்கல்வியை மல்வானை அல்-முபாரக் தேசியப் பாடசாலை மற்றும் கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியிலும் பயின்றிருந்தார்.
தனது கலைஇளமாணிப்பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், சட்ட இளமாணிப்பட்டத்தை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார். சட்டக்கல்லூரியில் பயின்று 1990ஆம் ஆண்டு சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார். 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரை சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக கடமையாற்றியதுடன் அக்காலப்பகுதியில் சட்டக்கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
நீதியரசர் மொஹமட் தாஹீர் மொஹமட் லபார் அவர்கள் சர்வதேச மனிதாபிமானச்சட்டம் மற்றும் கடல் சார் சட்டம் ஆகியவற்றில் சட்டமுதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். 1987ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியின் யூரர்சபை முன்னிலையான சமர்ப்பணப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், அதே ஆண்டில் தமிழ் விவாத அணியின் தலைவராகவும் திகழ்ந்துள்ளார்.இவர் நீதி பரிபாலனம், குடியியல் வழக்குகள், சொத்துரிமைச்சட்டம் மற்றும் முஸ்லீம் சட்டம் ஆகியன தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதி பல்வேறு சட்டக் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
மலேசியா, குவைட், நெதர்லாந்து,ஹொங்கொங், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச சட்ட மாநாடுகளில் பங்குபற்றியுள்ளதுடன், பயிற்சிநெறிகளையும் சட்டம் சார்ந்து பூர்த்தி செய்துள்ளார். #மேன்முறையீட்டுநீதிமன்ற #மொஹமட்லபார் #பதவிஉயர்வு #நீதிபதி