அடுத்த வருடம் முதல் முதலாம் தரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள கல்விச் செயலாளரே, வரம்பிற்கு அப்பாற்பட்டு பிரபலமான பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, ஒரு வகுப்பிற்கான மாணவர்களின் எண்ணிக்கையை 2016ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு மாணவர் என்ற வகையில், 2021ஆம் ஆண்டில 35ஆக ஆக குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின், அந்த வரம்பை மாற்றி, ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆக உயர்த்த முயற்சித்தது, அதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“இவ்வாறு இருக்கையில், தற்போதைய கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால், அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி பணிப்பாளர்களுக்கு 04.12.2020 திகதியிடப்பட்ட ED / 12/11/02/02 என்ற கடிதத்தின் ஊடாக, சுற்றறிக்கை எண் 29/2019 இன் பிரிவு 4.1 இற்கு அமைய, 2021ஆம் ஆண்டிலும் அதற்கு அப்பாலும் முதலாம் தர வகுப்பிலும் அதற்கு இணையான வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும். “
இதுபோன்ற பாராட்டுக்குரிய தீர்மானத்தை எடுத்த கல்விச் செயலாளர், இடைநிலை தரங்களுக்கு மிகவும் பிரபலமான தேசிய பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் நண்பர்களின் பிள்ளைகள் இந்த வழியில் கொழும்பின் தேசிய பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள முன்னணி தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.”
நல்லாட்சி முயற்சிகளைத் தடுக்கும்
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிக்கக் கோரிய விடயம் தொடர்பில், கொழும்பு ரோயல் கல்லூரி சங்கம் 2019 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்ததாக சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் நினைவு கூர்ந்தார்.
அந்த மனுவிற்கு அமைய, கடந்த வருடம் ஒக்டோபர் 14ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, 35ற்கு மேற்பட்ட மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2012இல் தீர்ப்பளித்த விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த முறையில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாமென உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தங்கள் நண்பர்களின் பிள்ளைகளை மிகப் பிரபலமான தேசிய பாடசாலைகளில் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர் கோரியுள்ளார்.
“பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான போட்டியைக் குறைக்க ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க கடந்த 8ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டதாக அறிவித்துவிட்டு, முன்னுரிமை ஆவணங்கள் மற்றும் சாதாரண நடைமுறைகள் மூலம் பிரபலமான தேசிய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளாமல் அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாக மாணவர்களை அனுமதிப்பது அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கையாகும்,” என இலங்கை ஆசிரியர் சங்கம் டிசம்பர் 9 புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
#இலங்கைஆசிரியர்சங்கம்#உச்சநீதிமன்றம்#கல்விச்செயலாளர்