யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏப்பிரல் மாதம் ஏற்பட்ட அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கான 51.6 மில்லியன் ரூபா இழப்பீட்டை பெற்றுத் தருவதாக இன்றுவரை கூறிவரும் அமைச்சர் புரவிப் புயலிற்கான இழப்பீட்டை பெற்றுத் தருவேன் என்கின்றார் இது கிடைக்குமா என விவசாயிகள் வினவுகின்றனர் .
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயலினால் வாழை, பப்பாசி உள்ளிட்ட பயன்தரு மரங்கள் அழிவடைந்தபோது விவசாயிகளிற்கு ஏற்பட்ட சேதம் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் ஊடாக மதிப்பிட்டன. இதன்போது 51.6 மில்லியன் இழப்பீடு ஏற்பட்டதாக மாவட்டச் செயலகம் அமைச்சுகளிற்கு அறிக்கையிட்டபோதும் இழப்பீடு மட்டும் கிடைக்கவில்லை.
இந்தக் காலம் தேர்தல் காலமாகவும் பின்னர் புதிய அமைச்சரவை எனவும் காலம் கடத்தப்பட்டபோதும் பின்பு செப்ரெம்பர்மாதம் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமகச்சரவை அனுமதித்த நிலையில் இந்த இழப்பீடு வருகின்றது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்து ஏற்பாட்டையும் மேற்கொண்டுள்ளார் என பிரச்சாரப்படுத்தப்பட்டது.
அனுமதி கிடைத்துள்ளது நிதி கிடைக்கும் என்றார் மாவட்டச் செயலாளர்.
அம்பன் புயலிற்கான இழப்பீட்டு செய்தி தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசணிடம் வினாவியபோது “அமைச்சரவை அனுமதி கிடைத்து விட்டது திறைசேரியில் தொடர்பு கொண்டுள்ளோம் விரைவில் பணம் கிடைக்கும் கிடைத்தவுடன் வழங்கப்படும்” எனத் தெரிவித்தும் 3 மாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் விவசாயிகளிற்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.
அம்பன் புயல் தாக்கம் ஏற்பட்டும் 7 மாதங்கள் முழுமையாக கடந்து விட்டன.
இந்த நிலையில் அம்பன் புயலிற்கு பிறகு நிபார், புரவி என இரு புயலினால் குடாநாட்டில் பாதிப்பு ஏற்பட்டதோடு புரவி ஒரு போடு போட்டு உலுப்பியது. இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் அமைச்சரவையில் பேசியுள்ளதோடு இழப்பீடு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடுகள் விவசாயிகளிற்கு கிடைத்தால் மகிழ்ச்சிக்குரிய விடயமே ஆனால் அவை எப்போது கிடைக்கும் என்பதே தற்போதுள்ள விடை இல்லாக் கேள்வியாகவுள்ளது.
விவசாயிகளிற்கு ஒரு நீதியும் கடற்றொழிலாளருக்கு ஒரு நீதியும் வழங்குகிறதா அரசாங்கம்?
இந்த நாட்டில் விவசாயிகள் ஏற்கனவே பாகுபாட்டுடன் பார்ப்பவர்களாகவே உள்ளனர். அதாவது தொழிலின் நிமித்தம் ஓர் கடற்றொழிலாளி ஒருவர் உயிரிழக்க நேரிட்டாள் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் அரசு விவசாயிகளை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்க்கின்றது. அதன் உதாரணம் ஓர் விவசாயி விவசாயத்தின்போது வயலில் இறந்தாலும் ஒரு லட்சம் ரூபாகூட வழங்கப்பட மாட்டாது. கடற்றொழிலாளருக்கு வழங்கும் இதே 10 லட்சத்தை எமக்கும் பெற்றுத் தாருங்கள் எனக் கேட்டு சலித்து விட்டார்கள்.
இதேபோன்று நெற் பயிர் அழிவடைந்தால் இலவச காப்புறுதி வழங்கப்படுவது போன்று பெரிய வெங்காயச் செய்கை அழிவடைந்தாலும் இலவச காப்புறுதி உண்டு . ஆனால் சிறிய வெங்காயச் செய்கை அழிவடைந்தால் இலவச காப்புறுதி கிடையாது சிறு வெங்காயம் பயிரிட்டவர்கள் பணம் செலுத்தி காப்புறுதி செய்திருந்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகைக்கான பணம் கிடைக்கும். அதாவது தென்னிலங்கையில் பெரிய வெங்காயம் பயிரிடப்படும் வடக்கிலும் புத்தளத்திலும் மட்டுமே சிறிய வெங்காயம் பயிரிடப்படுவது வழமையாகும்.
தெற்கிற்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதி.
இவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளிற்கு பாதிப்பு ஏற்பட்ட மறு வாரமே இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளபோதும் 7 மாதத்தின் முன்னர் பாதித்தவர்களுக்கான 51.6 மில்லியனின் நிலமையை கேள்விக்குறியாக்குமா அல்லது அதனையே இன்று வரை பெற்ற முடியாத நிலையில், புதிய பாதிப்புகளுக்கு இழப்பீட்டை பெற முடியுமா? என்ற கேள்விக்ள் எழுப்பா்ாட்டுள்ளன.
வெங்காய விடயத்தில் பாகுபாட்டின் மூலம் தெற்கு மக்களிற்கு கிடைக்கும் வரப் பிரசாதம் வடக்கு விவசாயிகளிற்கு கிடைக்க கூடாது என்ற மன நிலையின் வெளிப்பாடாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.
விவசாயிகள் ஒருபுறம் பாதிக்க மறுபுறம் மீனவர்களையும் புயல் விட்டு வைக்கவில்லை.
புரவிப் புயலினால் அதிகம் வடக்கு மக்களே பாதித்துள்ளனர் . இதில் விவசாயிகளுடன் மீனவர்களின் இழப்பும் பெரியது . மன்னார் மாவட்டத்தில் மீனவர்களிற்கு மட்டும் 31.6 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் அறிக்கையிட்டுள்ளது. அடுத்து அதிக இழப்பை சந்தித்த யாழ்ப்பாணம் மாவட்டம் தற்போதுதான அதன் பெறுமதியை கணிப்பிடுகின்றது. இவ்வாறு இந்த மக்கள் இழந்தவற்றிற்கு, இழப்பீடு கிடைக்குமா என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.
#அம்பன்புயல்#யாழ்குடாநாடு#விவசாயிகள்