கொரோனா தொற்றினால் இறந்த தமது சொந்தங்களை புதைக்கும் உரிமையை முஸ்லீம் குடும்பங்களிற்கு நிராகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செய்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் இறந்த உடல் ஒன்றை புதைப்பதால் தொற்று ஏற்படும் எனக் கருதுவது கற்பனையானது என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் பெயர் குறிப்பிடாத ஓர் நிபுணர் குழுவின் அறிக்கையில் தங்கி நின்று புதைப்பது கொரோனா தொற்றை ஏற்படுத்தும் என முடிவெடுத்திருப்பதன் விஞ்ஞான அடிப்படை என்ன என்பதனை நாம் அறிய விரும்புகிறோம்.
அண்மையில் தனது பெற்றோரின் அனுமதியில்லாமல் கொரொனோவால் பாதிக்கப்பட்ட 20 நாள் வயது நிரம்பிய பச்சிளம் குழந்தையின் சடலம் எரியூட்டப்பட்டது என்ற செய்தி எமக்கு பேரினவாதத்தின் மிகக் கோரமான முகத்தை மீள ஞாபகமூட்டியது. மேலும் இறந்த முஸ்லிம்களை மாலைத்தீவில் புதைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்துகின்றது என்ற செய்தி இன்னும் வலியைக் கூட்டும் தன்மையதாக உள்ளது. மிக நீண்ட காலமாக எண்ணிக்கையில் சிறிய சமூகங்கள் இந்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். ஆனால் தற்போது நடப்பது அந்த வரலாற்றில் இன்னும் ஓர் படி கீழே போவதாகும். இந்த கொடூரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வாறாக தமது உறவுகளின் சம்மதம் இல்லாமல் உடல்கள் எரியூட்டும் செயன்முறைகளோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தமது மனசாட்சியின் படி செயற்பட்டு இந்த அநியாயயத்தில் பங்கெடுக்க மறுக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ் சிவில் சமூக அமையம்.
(ஒப்பம்)
அருட்பணி. வி. யோகேஸ்வரன் மற்றும் பெ.ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்கள்