வரலாறு என்பது கட்டமைக்கப்பட்டதுதான். மெய்யான வரலாறு என்பதுதான் மிகவும் பொய்யானது என்பது அனைவரும் அறிந்தது. ஒவ்வொரு பகுதியினரும் தங்கள் தங்கள் நோக்கில் வரலாறுகளைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.புதுப்புதுத் தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் தேவை கருதி திரும்பத் திரும்பக் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.
இத்தகையதான எந்தவொரு வரலாற்றிலும் பெண்கள் இருந்ததில்லை, விளிம்புநிலை மக்களும் இருந்ததில்லை வரலாறு மனிதனின் கதையாகவும், கதையாடலாகவுமே இருந்து வருகிறது. அதாவது ஆதிக்கம் பெற்ற ஆணின் அல்லது ஆண்களின் கதை.
உலக வரைபடத்தில் காணப்படுகின்ற உலகமும், உலக வரலாறு என்று அறியத் தரப்பட்டிருப்பதுங்கூட ஒன்றாக இருந்ததுமில்லை, இருப்பதுமில்லை. இவை எல்லாமும் ஆதிக்க நோக்கில் கட்டமைக்கப்பட்டு அறிவியலாகத் தரப்பட்டு கற்கப்படுகிறது, பட்டங்கள் வழங்கிப் பதவிகளும் கொடுக்கப்படுகிறது. இதுதான் அறிவு என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியல் வரலாறுங்கூட ஆதிக்க நிலைப்பட்ட கட்டமைப்புக்களாகவே காணப்படுகின்றன. மிகப் பெரும்பாலும் எந்தவிதக் கேள்விகளுமற்று கொண்டாடப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய பின்னர் ஐக்கிய அமெரிக்க வெள்ளை ஆண் மேலாதிக்கமே அறிவியல் வரலாறாக இயங்கி வருகிறது. இவற்றின் முகவர் நிலையங்களாகப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இன்றளவும் தொழிற்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில்தான் சாதிய, வர்க்க, பெண்ணிலைவாத, தலித்திய, விளிம்புநிலைப்பட்ட, இனவாதத்திற்கு எதிரான, நிறவாதத்திற்கு எதிரான, காலனியத்திற்கு எதிரானதெனப் பலதரப்பட்ட ஆதிக்கங்களுக்கும் எதிரான சிந்தனைகளும், செயல்வாதங்களும் முனைப்புப் பெற்று வருவதையும் காணமுடியும்.
குறிப்பாக, ஆதிக்குடிகளதுஉலகந்தழுவிய எழுச்சியானது கட்டமைக்கப்பட்ட ஆதிக்கங்களின்அடிக்கட்டுமானத்தையே உலுப்புவதாக மாறிவருகிறது.’னுநஉழடழnணைiபெ நனரஉயவழைn’இ ‘னுநஉழடழnணைiபெ ருniஎநசளவைநைள’இ ‘சுhழனநள அரளவ குயடட’இ ‘டீடயஉம டiஎந அயவவநசள’ இயக்கங்கள் அறிவொளி இயக்கம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நவீனவாதத்தின் இருண்ட மறுபக்கமான காலனிய ஆதிக்கவாதத்தை வெளிப்படுத்தி மாற்றங்களுக்கு முற்படும் இயக்கங்களையும் மக்கள்மயப்படுத்தி வருவதையும் காணமுடிகிறது.
ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க அறிவுருவாக்கச் சூழலில் காலனிய நீக்கச் சிந்தனைகளும், செயல்வாதங்களும் வேர்கொண்டு வளர்ந்து கிளைகள்விட்டுப் பரந்து உலகங்கள் முழுவதும் பரவத்தொடங்கி இருப்பதும் யதார்த்தமாக இருக்கிறது.
எத்தகைய நிலைமைகளிலும் எத்தகைய வழிமுறைகளுக்கு ஊடாகவும் காலனிய ஆதிக்கத்தைத் தக்கவைப்பது என்பது உலக அரசியல், பொருளாதார, சமூகப், பண்பாட்டு நடவடிக்கையாக்கப்படுகிறது. முக்கியமாக மத விவகாரம் அடிப்படைவாத நடவடிக்கையாக இருக்கிறது. இதன் காரணமானவெறுப்பரசியல் பண்பாட்டுச் சூழலில் பக்கம் பக்கமாக வாழ்ந்திருந்த மனிதர்கள் பகைவர்களாக மாற்றப்பட்டு உறவழித்தலின் மூலம் உள்ளூர் உற்பத்திகள், உருவாக்கங்கள், பகிர்வுகள், விற்பனைகள் என்பவற்றுக்கான சாத்தியப்பாடுகள் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. அந்த இடத்தில் பல்தேசிய நிறுவனங்களின்உற்பத்திகளால்நிறைக்கப்பட்ட பல்பொருள் அங்காடிச் சங்கிலிகள் கொத்தளம் அமைக்கின்றன.
இத்தகையதொரு சமூக அரசியற் பண்பாட்டுச் சூழலில் நவீனமானதென்று அறிவிக்கப்படும் வரலாறுகள் பற்றிய கேள்வி எழுப்புதலும் தேடுதலும் அவசியமாகும். நவீன வரலாறு பற்றிய மரபுரீதியான விளக்கமும் வியாக்கியானமும் காலனிய நீக்கம்செய்யப்படுவதன் அவசியம் உரையாடலுக்கும் நடைமுறைக்கும் உரியதாகி இருக்கிறது.
இதேபோல பண்பாடுகளும் பன்மைத்தன்மை கொண்டவை. வித்தியாசங்கள் நிறைந்தவை. எந்தவொரு பண்பாடும் ஏனையவற்றில் இருந்து மேலானது என்பது யதார்த்தமற்றது. எந்தவொரு இடமும் எந்தவொரு நகரமும் பண்பாட்டின் தலைநகரமாகக் கருதிக் கொள்வது மேலாதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறொன்றுமில்லை. இதனுடன் தொடர்புடையதுதான் குறித்த சில சமூகங்களது கலைப் பண்பாட்டு அம்சங்களைத் தேசிய அடையாளங்களாக முன் நிறுத்துவதும்.
இத்தகையதொரு பின்னணியில் நவீனமயமாக்கம் என்ற காலனிய மயமாக்கச் சூழலில் அதை உள்ளூர் சமூகங்களும் சமூக நிறுவனங்களும் சமூக ஆளுமைகளும் எதிர்கொண்ட விதங்கள், ஏற்றுக்கொண்ட விதங்கள் வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்தவை.
இதில் மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது எந்தவிதக் கவனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவை கதைகளாகவும், கதைப்பாடல்களாகவும், பழமொழிகளாகவும், மரபுத்தொடர்களாகவும், வாய்மொழி வழக்காறுகளாகவும் இயக்கத்தில் இருந்ததன் காரணமாக இவை பொருட்படுத்தப்படவில்லை.
எழுத்தில் இருப்பதே ஆதாரமானது என்ற நவீனமயமாக்கமெனும் காலனிய மயமாக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இதுவும். அண்மைக்காலங்களிலேயே வாய்மொழி வழக்காறுகள் உள்ளூர் அறிவு மரபுகள் பற்றிய சிந்தனைகள் முளைகட்டத் தொடங்கியுள்ளன. இவையும் உயர்கல்வி நிறுவனங்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வெளியேதான்.
உயர்கல்வி நிறுவனங்கள் மிகக்கறாராக எழுத்தில் இருப்பதையும் மேற்படி நிறுவன அங்கீகாரத்திற்கு உரியதை மட்டுமே கவனத்திற்கு எடுத்துக்கொள்வதை வற்புறுத்தி வருகின்றன.
அறிவுருவாக்கத்தின் பல்வேறு முறைமைகளின் இருப்பையும், நவீன அறிவு என்னும் காலனிய அறிவு உருவாக்கம் பெறுவதற்கு முன்னராகவே ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட அறிவுருவாக்கங்களை மறுதலிப்பதனூடாக கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் காலனிய முகவர் நிலையங்களாக அவற்றின் பணியை இன்றளவும் மிகவும் வலுவாகச் செய்து வருவதை கண்டுகொள்வதொன்றும் சிறப்புத் தேர்ச்சிக்குரிய விடயமல்ல. அது பொதுப் புத்திக்குரிய விடயம்.
இத்தகைய மக்கள்மயப்பட்ட அறிவுருவாக்கங்களைக் கவனமே கொள்ளாது நவீனமயப்படுத்தப்பட்ட நிறுவனங்களும் ஆளுமைகளுமே வரலாற்று உருவாக்கிகள், சமூக உருவாக்கிககள் என்ற நிலைப்பாடு கொண்டு அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவது என்பது நவீனமயமாக்கமெனும் காலனியமயமாக்கத்தின் பிடிகளுக்குள் நின்றியங்கும் நிலைமையைப் புலப்படுத்துவதாகவே இருக்கிறது.
உதாரணமாக இந்தப்பின்னணியிற்தான் நாவலரை முன்வைத்து ஆதரவாகவும் எதிராகவும் நிகழ்த்தப்படும் உரையாடல்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.
எந்தவொரு நம்பிக்கையும், தத்துவமும் நிறுவனமயப்படும் பொழுது அது அதிகாரத்தையும், அதிகாரக் கட்டமைப்புக்களையும் கொண்டு இயங்கத் தொடங்கி விடுகிறதென்பது புதிரானதல்ல. இது மறுப்புப் பண்பாட்டையும், வெறுப்புப் பண்பாட்டையும், நிராகரிப்புப் பண்பாட்டையும் கட்டி வளர்ப்பதாக இருக்கும்.
மதங்களுக்கிடையிலான விவாதங்களும் மோதல்களும் அதிகார உருவாக்கத்திற்கானதாக இருக்கிறதேயன்றி ஆன்ம ஈடேற்றத்திற்கானதாக இருந்ததில்லை. காலனியப்படுத்தலின் கூறாக அறிமுகப்படுத்தப்பட்ட கிறித்தவம் ஆன்மா அற்ற ஆட்களை ஆட்கொள்வதென்ற மிகவும் வன்முறைக் கூறுகள் நிறைந்த முறைமையினைக் கையாண்டிருப்பது நிறையவே ஆராயப்பட்டிருக்கிறது.
இத்தகைய சிந்தனைகளை உள்வாங்கிய உள்ளூர் நவீனமயமாக்கமெனும் காலனிய உருவாக்கிகள். ஏலவே பயில்முறையில் இருந்த இயற்கை வழிபாட்டு முறைகளைப் பேயாட்டமாகவும், காலனியர் மொழியிலேயே காட்டுமிராண்டித்தனமென்றும் மிகவும் வலுவாக எதிர்த்தனர், நிராகரித்தனர், அழித்து விடுவதே நாகரிகமென்ற உச்ச நோக்குடையவராகவும் இருந்தனர்.
உண்மையில் இந்த உலகமே உயிர்களின் உறைவிடம் இறந்த ஆத்துமங்கள் காடுகளில், மலைகளில் அல்லது வெளிகளில் எங்கோ இருந்து உயிர்வாழும் உறவுகளைக்காத்து வருகிறார்கள் என்பதான நம்பிக்கை வாழ்க்கையாக இருக்கிறது. இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்தல் நோக்கமாக இருந்தது, இருந்து வருகிறது. இன்றும் நடைமுறையில் இருந்து வரும் கிராமத் தெய்வ வழிபாடுகள், சடங்குகளிலும், பழங்குடிச் சமூகங்களது சடங்குகளிலும் காணவும் அனுபவிக்கவும் அறியவும் முடியும். இவற்றிலுங்கூட உரையாடலுக்குட்படுத்த வேண்டிய விடயங்கள் இருப்பதைக் காணமுடியும். உரையாடலும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே தலைவர்களூடாகச் சமூகங்களை விளங்கிக் கொள்வதும் விளக்க முற்படுவதுங்கூட எந்தளவிற்கு நீதி நியாயமானது என்பது கேள்விக்குரியது. ஏனெனில் சமூக அசைவியக்கத்தில் மக்களின் பங்கை வெகுசனமாகக் (ஆயளள) கருதுவதன் வெளிப்பாடே மேற்படி நிலைமை என்று கருத முடிகிறது.
ஆகவே உரையாடல்கள் கட்டுண்ட வெளிகளுக்குள் இருந்து வெளிவர வேண்டி இருக்கிறது. என்பதைச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.