கடந்த வாரம் நைஜீரியாவில் பாடசாலை ஒன்றிலிருந்து துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட மாணவா்களில் 344 போ் மீட்கப்பட்டுள்ளனா்.
நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படையாளிகளாக மாற்றும் நடவடிக்கைகள மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தநிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணம் கங்கரா என்ற பகுதியில் உள்ள அரச ஆண்கள் பாடசாலைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் 450-க்கும் மேற்பட்ட மாணவா்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட மாணவா்களை தேடும் பணியில் காவல்துறையினரும் , ராணுவமும் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், காட்டுப்பகுதி ஒன்றில் மாணவர்களை கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தனையடுத்து குறித்த காட்டுப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு 344 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
மேலும் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் தப்பிச்சென்றுவிட்டதாகவும் மேலும், சில மாணவர்களை அவா்கள் தங்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து எஞ்சிய சில மாணவர்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தியுள்ளதுடன் மீட்கப்பட்ட 344 மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். #நைஜீரியா #கடத்தப்பட்ட #மாணவா்கள் #மீட்பு