துருக்கி மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த அந்த தனியார் மருத்துவமனை துருக்கியின் தென் பகுதியில் உள்ளது.
சாங்கோ யுனிவேர்சிற்றி ஹெகஸ்பிற்றல் என்ற அந்த மருத்துவமனை, காஜியான்டெப் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த வெடிப்பால், அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீப்பற்றிக்கொண்டது. உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவர், வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது இறந்தார்.
துருக்கியில் இதுவரை சுமார் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களில், 17,610 பேர் இறந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
இந்த வெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தவிர, அதனால் ஏற்பட்ட தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது. விரைவிலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
56 வயது முதல் 85 வயது வரையில் பல வயதுள்ளவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வு நடந்துவருகிறது.
விபத்து நடந்த வார்டில் இருந்த பிற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக காஜியான்டெப் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இறந்தவர்களுக்கு அந்த அறிக்கையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.